Sunday , December 3 2023
1154180

22 அடியை தாண்டியது செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம்; வெளியேற்றப்படும் உபரிநீர் அளவு அதிகரிக்கப்படும்: அதிகாரிகள் தகவல் | The water level of Chembarambakkam lake crossed 22 feet

ஸ்ரீபெரும்புதூர் / திருவள்ளூர்: செம்பரம்பாக்கம் ஏரியின் நீர் மட்டம் 22 அடியை தாண்டியதால், இந்த ஏரியிலிருந்து வெளியேற்றப்படும் உபரி நீரின் அளவை அதிகரிக்க வாய்ப்புள்ளது என, நீர்வள ஆதார துறை அதிகாரிகள் தெரிவித்தனர். காஞ்சிபுரம் மாவட்ட பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக சென்னையின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் முக்கிய ஏரிகளில் ஒன்றான செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. நேற்று காலை நிலவரப்படி, செம்பரம்பாக்கம் ஏரிக்கு விநாடிக்கு 301 கன அடி மழை நீர் வந்து கொண்டிக்கிறது.

ஆகவே, 3,645 மில்லியன் கன அடி கொள்ளளவு, 24 அடி உயரம் உள்ள செம்பரம்பாக்கம் ஏரியின் நீர் இருப்பு 3,130 மில்லியன் கன அடியாகவும், நீர் மட்டம் 22.04 அடியாகவும் உள்ளது. சென்னை குடிநீர் தேவைக்கு விநாடிக்கு 104 கன அடி, உபரி நீர் வெளியேற்றம் விநாடிக்கு 25 கன அடி என்பது உட்பட விநாடிக்கு 162 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இந்நிலையில், தற்போது செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் 22 அடியை தாண்டி இருப்பதாலும், தொடர்ந்து மழை பெய்யும் என, வானிலை ஆய்வு மையம் அறிவித்திருப்பதாலும் நீர்வரத்து அதிகரிக்கும் வாய்ப்புள்ளது.

ஆகவே, அரசின் உயரதிகாரிகளுடன் ஆலோசித்து, நீர் வரத்துக்கேற்ப, செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து வெளியேற்றப்படும் உபரி நீரின் அளவை அதிகரிக்க வாய்ப்புள்ளது. அவ்வாறு அதிகளவில் உபரி நீர் வெளியேற்றப்படும்போது, அடையாற்றின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்படும் எனவும், ஏரியின் நீர்மட்டம் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது எனவும் நீர்வள ஆதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதே போல், மழையால் திருவள்ளூர் மாவட்ட பகுதிகளில் உள்ள சென்னைக்கு குடிநீர் தரும் ஏரிகளுக்கும் நீர் வரத்து அதிகரித்துள்ளதால், அந்த ஏரிகளின் நீர் இருப்பு மற்றும் நீர் மட்டம் அதிகரித்துள்ளது.

இதில், நேற்று காலை நிலவரப்படி, பூண்டி ஏரிக்கு விநாடிக்கு 120 கன அடி மழை நீர் வந்து கொண்டிருக்கிறது. இதனால், 3,231 மில்லியன் கன அடி கொள்ளளவு, 35 அடி உயரம் கொண்ட பூண்டி ஏரியின் நீர் இருப்பு, 1,862 மில்லியன் கன அடியாகவும், நீர் மட்டம் 30.52 அடியாகவும் உள்ளது. புழல் ஏரிக்கு விநாடிக்கு 606 கன அடி மழைநீர் வருவதால், 3,300 மில்லியன் கன அடி கொள்ளளவு, 21.20 அடி உயரம் கொண்ட புழல் ஏரியின் நீர் இருப்பு, 2,745 மில்லியன் கன அடியாகவும், நீர் மட்டம் 18.67 அடியாகவும் உள்ளது.

1,081 மில்லியன் கன அடி கொள்ளளவு, 18.86 அடி உயரம் கொண்ட சோழவரம் ஏரிக்கு விநாடிக்கு 93 கன அடி மழைநீர் வந்து கொண்டிருக்கிறது. எனவே, சோழவரம் ஏரியின் நீர் இருப்பு 636 மில்லியன் கன அடியாகவும், நீர் மட்டம் 14.37 அடியாகவும் இருக்கிறது. 500 மில்லியன் கன அடி கொள்ளளவு, 36.61 அடி உயரம் உள்ள கண்ணன்கோட்டை- தேர்வாய் கண்டிகை ஏரிக்கு விநாடிக்கு 30 கன அடி மழைநீர் வருவதால், அந்த ஏரியின் நீர் இருப்பு 433 மில்லியன் கன அடியாகவும், நீர் மட்டம் 34.56 அடியாகவும் உள்ளது.

.

Thanks

Check Also

1162679

மிக்ஜாம் புயல் | இதுவரை 11 நிவாரண முகாம்களில் 685 பேர் தங்கவைப்பு: முதல்வர் ஸ்டாலின் தகவல் | 685 people accommodated in 11 relief camps: Chief Minister Stalin informs

சென்னை: “சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் 2 கோடியே 44 லட்சம் பொதுமக்களுக்கு பொதுவான எச்சரிக்கை …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *