Sunday , December 3 2023
1126765

15 நாட்களுக்கு தமிழகத்துக்கு காவிரியில் தண்ணீர் திறக்க வேண்டும்: கர்நாடக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு | Supreme Court orders Karnataka government to release Cauvery water to Tamil Nadu for 15 days

புதுடெல்லி: காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டபடி, விநாடிக்கு 5,000 கனஅடி வீதம் 15 நாட்களுக்கு காவிரியில் தமிழகத்துக்கு தண்ணீர் திறந்துவிடுமாறு கர்நாடக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

காவிரியில் விநாடிக்கு 24,000 கனஅடி நீர் திறக்க‌ உத்தரவிடக் கோரி உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு கடந்த மாதம் அவசர மனு தாக்கல் செய்தது. இதை விசாரிக்க, நீதிபதி பி.ஆர்.கவாய் தலைமையில் தனி அமர்வு அமைக்கப்பட்டது. இந்த வழக்கில் காவிரி மேலாண்மை ஆணையம், கர்நாடக அரசு தரப்பில் பதில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இந்நிலையில், நீதிபதிகள் பி.ஆர்.கவாய், பி.எஸ்.நரசிம்மா, பி.கே.மிஸ்ரா அமர்வு முன்னிலையில் இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நடந்த வாதம்:

தமிழக அரசுத் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் முகுல் ரோஹ்தகி: காவிரி நதிநீர் பங்கீட்டு விவகாரத்தில் உரிய முறையில் நீரைப் பங்கிட்டுக் கொள்ள காவிரி மேலாண்மை ஆணையம், காவிரி ஒழுங்காற்று குழு ஆகிய அமைப்புகளை உச்ச நீதிமன்றம் ஏற்படுத்திஉள்ளது. மேற்கண்ட 2 அமைப்புகளும், தமிழகத்துக்கு விநாடிக்கு 5,000 கனஅடி வீதம் 15 நாட்களுக்கு தண்ணீர் திறக்குமாறு உத்தரவிட்டுள்ளன. ஆனால், கர்நாடக அரசு, தமிழகத்துக்கு முறையாக நீரை திறக்கவில்லை. இதனால் தமிழகத்தில் நெற்பயிர்கள் வாடும் நிலையில் உள்ளன. குடிநீர்த் தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது. எனவே, தமிழகத்துக்கு விநாடிக்கு 24,000 கனஅடி வீதம் தண்ணீர் திறக்குமாறு உத்தரவிட வேண்டும்.

கர்நாடக அரசு தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஷ்யாம் திவாம்: கர்நாடகாவில் இந்த ஆண்டு பருவமழை பொய்த்துவிட்டது. இதனால், கிருஷ்ணராஜ சாகர், கபினி, ஹாரங்கி, ஹேமாவதி ஆகிய 4 அணைகளிலும் போதிய அளவுக்கு நீர் இல்லை. எனவே, கர்நாடக விவசாயிகளின் சாகுபடிக்கு தண்ணீர் திறக்கப்படவில்லை.

தற்போது கர்நாடக அணைகளில் நீர் இல்லாததால், காவிரி மேலாண்மை ஆணையம், ஒழுங்காற்றுக் குழுவின் உத்தரவை அமல்படுத்த முடியாத நிலை உள்ளது. கர்நாடகாவின் குடிநீர், பாசனத் தேவைக்கு 105 டிஎம்சி நீர் தேவைப்படும் நிலையில், தற்போது 56 டிஎம்சி மட்டுமே இருப்பு உள்ளது. எனவே, தமிழக அரசின் கோரிக்கையை ஏற்கக் கூடாது. காவிரி மேலாண்மை மற்றும் ஒழுங்காற்று குழுவினர் கர்நாடக அணைகளைப் பார்வையிட்டு, உண்மை நிலையை அறிய வேண்டும். வறட்சிக் காலங்களில் நீர் பங்கீட்டு முறை குறித்த சூத்திரத்தை உருவாக்க வேண்டும். இவ்வாறு வாதம் நடந்தது.

தொடர்ந்து, நீதிபதிகள் தமது உத்தரவில் கூறியதாவது: காவிரி மேலாண்மை ஆணையம், காவிரி ஒழுங்காற்றுக் குழு ஆகிய 2 அமைப்புகளிலும் நீர்வளத் துறை, வேளாண் துறை, பருவநிலை நிபுணர்கள் இடம்பெற்றுள்ளனர். அந்தக் குழுவினர் 2 மாநிலங்களின் நிலையையும் ஆராய்ந்த பிறகே, உத்தரவுகளைப் பிறப்பிக்கின்றனர். அவர்களது முடிவில் அறிவியல்பூர்வமான அணுகுமுறை இருக்கும். எனவே, அந்த அமைப்புகள் அளித்த உத்தரவை கர்நாடகா, தமிழகம் ஆகிய 2 மாநிலங்களும் பின்பற்ற வேண்டும்.

எனவே, காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவுக்கு தடைவிதிக்கக் கோரும் கர்நாடக அரசின் மனுவை ஏற்க முடியாது. ஆணையத்தின் உத்தரவுப்படி, தமிழகத்துக்கு அடுத்த 15 நாட்களுக்கு விநாடிக்கு 5,000 கனஅடி வீதம் தண்ணீர் திறக்க வேண்டும். அதேநேரம், 24,000 கனஅடி நீரைத் திறக்க வேண்டுமென்ற தமிழக அரசின் கோரிக்கையையும் ஏற்க முடியாது. இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

Thanks

Check Also

1162666

பாஜக வசமாகும் ராஜஸ்தான்: வசுந்தரா ராஜே அடுக்கும் காரணங்களும், காங். ‘சறுக்கல்’ பின்புலமும்! | Rajasthan CM Ashok Gehlot to hand over resignation to governor Sunday evening says Sources

புதுடெல்லி: ராஜஸ்தானில் பாஜக ஆட்சியை வசப்படுத்தும் நிலையில், “இந்த சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள், பிரதமர் மோடியின் தலைமைக்கும், அமித் ஷாவின் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *