Saturday , December 9 2023
1153212

வானிலை முன்னறிவிப்பு: தமிழகத்தின் 13 மாவட்டங்களில் கன, மிக கனமழை வாய்ப்பு | Weather Forecast: Balachandran interview

சென்னை: “அடுத்த 24 மணி நேரத்துக்கு நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருவாரூர், கடலூர், விழுப்புரம் மாவட்டங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர், திருச்சி மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்” என்று வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், “தென்கிழக்கு வங்கக் கடலில், இன்று (நவ.14) காலை காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. இது மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து நாளை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதியில் ஆந்திர கடற்கரைப் பகுதிகளில் நிலவக்கூடும். இது தொடர்ந்து ஆழ்ந்த காற்றழுத் தாழ்வு மண்டலமாக வரும் 16-ம் தேதி வலுப்பெற்று வடகிழக்கு திசையில் நகர்ந்து வடமேற்கு வங்கக் கடல் பகுதியில், ஒடிசா கடற்கரைப் பகுதியில் நிலவக்கூடும்.

மேலும், தற்போது தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில், மற்றுமொரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் பரவலாக மழை பெய்துள்ளது. 7 இடங்களில் மிக கனமழையும், 31 இடங்களில் கனமழையும் பெய்துள்ளது. அதிகபட்சமாக நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யத்தில் 17 செ.மீ மழை பதிவாகி உள்ளது.

அடுத்துவரும் இரண்டு தினங்களைப் பொறுத்தவரையில், தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் கடலோர மாவட்டங்களில் அநேக இடங்களிலும், உள்மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் மிதமான மழை பெய்யக்கூடும். கனமழையைப் பொறுத்தவரையில், அடுத்து வரும் 24 மணி நேரத்துக்கு நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருவாரூர், கடலூர், விழுப்புரம் மாவட்டங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர், திருச்சி மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.

மீனவர்கள் இன்று மன்னார் வளைகுடா, குமரிக் கடல், தமிழக கடற்கரை பகுதிகளிலும், நாளை மன்னார் வளைகுடா, குமரிக்கடல் பகுதிகளில் பலத்த காற்றானது மணிக்கு 40 முதல் 45 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும். மேலும், ஆந்திர கடற்கரைப் பகுதிகள், மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகள், தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் இன்று முதல் 16-ம் தேதி வரை, பலத்த காற்று வீசக்கூடும் என்பதால், மீனவர்கள் இந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.

சென்னை மற்றும் புறநகரைப் பொறுத்தவரை, இன்று மிதமான நகரின் பல பகுதிகளில் மிதமான மழை பெய்யக்கூடும். சில பகுதிகளில் சற்று பலத்த மழை பெய்யக்கூடும். நாளை மிதமான மழை பெய்யக்கூடும். வடகிழக்குப் பருவமழையைப் பொறுத்தவரையில், தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில், அக்டோபர் 1ம் தேதி முதல் இன்றுவரை பதிவான மழையின் அளவு 23 செ.மீ. இந்த காலக்கட்டத்தின் இயல்பான அளவு 27 செ.மீ. இது இயல்பைவிட 14 சதவீதம் குறைவு” என்று அவர் கூறினார்.

Thanks

Check Also

1164932

புதுச்சேரியில் ரூ.393 கோடியில் ப்ரீபெய்டு ஸ்மார்ட் மீட்டர் பொருத்த அரசு அனுமதி – நடைமுறை என்ன? | Govt approves Rs 393 crore prepaid smart meter installation in Puducherry

புதுச்சேரி: புதுச்சேரியில் ரூ.393 கோடியில் ப்ரீபெய்ட் ஸ்மார்ட் மீட்டர் பொருத்த அரசு அனுமதி தந்துள்ளது. மின் மீட்டருக்கான பணத்தை 90 …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *