Sunday , December 3 2023
1127797

”வாக்குறுதிகளை காப்பாற்றாத பாஜகவை தமிழகத்தில் டெபாசிட் வாங்கவிடக்கூடாது” – முதல்வர் மு.க.ஸ்டாலின் சூளுரை | BJP should not be allowed to buy deposits in TN: CM MK Stalin

திருப்பூர்: வாக்குறுதிகளை காப்பாற்றாத பாஜகவை, தமிழகத்தில் டெபாசிட் கூட வாங்க விடக்கூடாது என மேற்கு மண்டல வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் பயிற்சிப் பாசறை கூட்டத்தில் திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் பேசினார்.

மேற்கு மண்டலத்துக்கு உட்பட்ட மாவட்டங்களின் வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் பயிற்சிப் பாசறை கூட்டம் திருப்பூர் மாவட்டம் காங்கயம் படியூர் தொட்டியபாளையத்தில் இன்று நடந்தது. இந்த நிகழ்ச்சியானது திமுகவின் மாநாடு போல் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. காலை நிகழ்வில் கட்சியினருக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. இதில் பங்கேற்ற திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் பேசியதாவது: நாடாளுமன்றத் தேர்தலின் தொடக்கப்புள்ளியாக வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டத்தை திமுக நடத்தி வருகிறது. மேற்கு மண்டலத்தை சார்ந்த வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டத்தை தான், அமைச்சர் சாமிநாதனும், மாவட்டச் செயலாளரும் கூட்டுவதாக சொல்லி, மேற்கு மண்டல மாநாட்டை இங்கு கூட்டி உள்ளனர். திராவிட இயக்கம் கருவான ஊர் திருப்பூர். தந்தை பெரியாரும், அண்ணாவும் முதன்முதலாக சந்தித்தது திருப்பூரில் தான். பல்வேறு அரசியல் திருப்பங்களுக்கு அடித்தளமிட்ட ஊர் திருப்பூர்.

திருப்பூரை மாநகராட்சியாக உயர்த்தியது, மாவட்டமாக மாற்றியவர் மறைந்த தலைவர் கருணாநிதிதான். தமிழகம் முழுவதும் பூத் கமிட்டிகளை அமைத்துள்ளோம். கோடிக்கணக்கில் உறுப்பினர்களைக் கொண்ட இயக்கத்துக்காக தேர்தல் பணி செய்பவர்கள் நீங்கள். பல கட்ட ஆய்வுக்குப் பிறகு தான், வாக்குச்சாவடி பொறுப்பாளர் அட்டை வழங்கப்பட்டுள்ளது. இங்கு கொடுத்த பயிற்சிகளை மனதில் வைத்து தேர்தலில் செயல்பட வேண்டும்.

வாக்குச்சாவடியில் உள்ள ஒவ்வொரு குடும்பத்திலும் நீங்கள் அங்கமாக மாற வேண்டும். வாக்குச்சாவடிக்கு உட்பட்ட குடும்ப விவரங்களை நீங்கள் தெரிந்து வைத்திருக்க வேண்டும். தினமும் கட்சிக்காக 1 மணிநேரம் ஒதுக்குங்கள். அரசின் திட்டங்கள் முழுமையாக தெரிந்து வைத்து கொள்ளுங்கள். வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் கொண்டுவந்து தரும் மக்களின் நியாயமான கோரிக்கையை செவிசாய்த்து அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்கள் நிறைவேற்றித்தர வேண்டும். அனைவருக்கும் பொதுவான மக்களாட்சியை நாம் நடத்துவதால், யாரும் நம்மை நிராகரிக்க முடியாது.

தமிழகத்தில் ஏதாவது ஒரு விதத்தில் மக்கள் பயன்பெறும் வகையில் ஆட்சியை திமுக நடத்தி வருகிறது. தேர்தல் வாக்குறுதியில் மிகப்பெரியது கலைஞர் உரிமைத் தொகை திட்டம். அது இன்றைக்கு நிறைவேற்றப்பட்டுள்ளது. அதன்பின்னர் பலமடங்கு வரவேற்பு நமக்கு கிடைக்கிறது. கட்டணமில்லா பேருந்து திட்டத்திலும் பெண்கள் பயன்பெற்றுள்ளானர். நகைக்கடன் தள்ளுபடி, காலை உணவுத்திட்டம் என, தமிழகத்தின் ஒவ்வொரு குடும்பத்திலும் நேரடியாக ரூ. 3 ஆயிரம் முதல் ரூ.4 ஆயிரம் வரை மாதம் பயன்பெறுகிறார்கள்.

ஆனால் மத்தியில் 2-வது முறையாக ஆளும் மோடி அரசு, 3-வது முறையாக வர ஆசைப்படுகிறார்கள். அவர்கள் வரக்கூடாது. கொள்ளை அடிக்கும் அரசாக மத்திய பாஜக அரசு உள்ளது. விவசாயிகளின் வருமானத்தை இரண்டு மடங்கு ஆக்குவோம், ஆண்டுக்கு 2 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு தரப்படும் என மோடி சொன்னார். இவற்றையெல்லாம் செய்தாரா? நம்முடைய பட்டதாரி இளைஞர்களை பக்கோடா விற்க சொல்கிறார். 2024- 2025-ம் ஆண்டுக்குள் பொருளாதாரத்தில் 5 டிரில்லியன் டாலராக மாற்றுவோம் என்று சொன்னார்கள். இன்றைக்கு பணமதிப்பு நீக்கம், ஜிஎஸ்டி, கோவை, திருப்பூர் நகரங்கள் நொடிந்துப் போய்விட்டன. டாலர் சிட்டி திருப்பூர் இன்றைக்கு டல் சிட்டியாக மாறிவிட்டது. மத்திய பாஜகவின் தவறான பொருளாதார கொள்கையால் கோவை மாநகரம் திறனற்ற மாநகராக தேய்பிறையாகிவிட்டது.

சேலம் உருக்காலையை நவீனப்படுத்துவோம், ஜவுளி சந்தைக்கான உட்கட்டமைப்பை ஈரோட்டில் மேம்படுத்துவதாக மத்திய பாஜக வாக்குறுதி தந்தது. ஈரோடு மஞ்சளை இந்தியாவே நேசிக்குது. ஆனால் அந்த தொழில் மோசமடைந்துவிட்டது. மோடி டிசைன், டிசைனாக கொடுத்த வாக்குறுதிகள் என்னாச்சு? வெறும் வாக்குறுதிகளாக மட்டுமே இன்னும் உள்ளன. சந்திராயன் விட்டதும், ஜி-20 மாநாட்டையும் மோடி பெருமையாக சொல்கிறார். சுழற்சி அடிப்படையில் ஜி.20-க்கு இந்தியா தலைமை தாங்கியது. நிலவை நோக்கிய பயணம் பாஜகவின் சாதனை அல்ல. சுதந்திரம் பெற்ற காலத்தில் இருந்து பலரின் விண்வெளி ஆராய்ச்சி பங்கு இதில் உண்டு. ஆகவே தான் மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை கொண்டுவந்து பாஜக கணக்கு காட்ட பார்க்கிறது. ஆனால் அதனையும் உடனடியாக வழங்கவில்லை. 2029-ம் ஆண்டு தான் வழங்குவார்கள்.

இந்த வஞ்சக திட்டத்தை எதிர்த்து, திமுக தான் முதன்முதலில் குரல் கொடுத்தது. கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றாத பாஜகவை, தமிழகத்தில் டெபாசிட் கூட வாங்கவிடக் கூடாது. அதிமுகவின் ஊழலுக்கும், பாஜகவின் மதவாதத்துக்கும் இருவரும் ஒருவருக்கொருவர் மாறி, மாறி துணை நிற்கின்றனர். பழனிசாமி ஊழல் வழக்கில் இருந்து தன்னை காப்பாற்றிக்கொள்ளவே டெல்லி சென்று அமித்ஷாவை சந்தித்தார். ஒரே நாடு ஒரே தேர்தலுக்கு அதிமுக ஆதரவு கரம் தருகிறது. சட்டப்பேரவைக்கும் தேர்தல் வந்தால், அதிமுகவின் இன்றைய நிலையும் போய்விடும். நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக படுதோல்வி அடைய வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

Thanks

Check Also

1162680

மிக்ஜாம் புயல் | சென்னை மெட்ரோ ரயில் சேவையின் திங்கள்கிழமை அட்டவணையில் மாற்றம் | Trains running tomorrow as per Saturday schedule: Metro Rail Notification

Last Updated : 03 Dec, 2023 07:04 PM Published : 03 Dec 2023 07:04 PM …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *