சேலம் / ஈரோடு: சேலம் மாவட்டத்தில் ஒரு வாரத்துக்கு முன்னர் கிலோ ரூ.100-க்கு குறையாமல் இருந்த தக்காளி விலை, தற்போது கிலோ ரூ.85 ஆக குறைந்துள்ளது. உழவர் சந்தைகளில் அதிகபட்ச விலை கிலோ ரூ.80 ஆக இருப்பதால், மக்கள் ஆறுதல் அடைந்துள்ளனர்.
இது குறித்து வேளாண்துறை அதிகாரிகள் கூறியது: அறுவடை முடிவுற்றதால் சந்தைகளுக்கு தக்காளி வரத்து, கடந்த ஒரு மாதமாக மிகவும் குறைந்திருந்தது. தற்போது, புதிதாக பயிரிடப்பட்ட வயல்களில், ஆங்காங்கே தக்காளி விளைச்சல் கிடைக்கத் தொடங்கியுள்ளது. எனவே, சந்தைக்கு வரும் தக்காளி கூடைகளின் அளவு அதிகரித்துள்ளது. இதன் காரணமாக தக்காளி விலை குறையத் தொடங்கியுள்ளது.
சேலம் மாநகரில் உள்ள அஸ்தம்பட்டி, சூரமங்கலம், தாதகாப்பட்டி, அம்மாப்பேட்டை உழவர் சந்தைகளில் கடந்த வாரம் கிலோ ரூ.95 வரை தக்காளி விற்பனையானது. தற்போது சராசரி விலை கிலோ ரூ.80 ஆக குறைந்துள்ளது. ஆத்தூர், மேட்டூர், தம்மம்பட்டி உள்ளிட்ட உழவர் சந்தைகளில் தக்காளி கிலோ ரூ.60 முதல் ரூ.80 வரை கிடைக்கிறது. வரும் நாட்களில் தக்காளி விலை மேலும் குறைய வாய்ப்புள்ளது, என்றனர்.
ஈரோட்டில் ரூ.60-க்கு விற்பனை: ஈரோடு நேதாஜி காய்கறிச் சந்தைக்கு, கடந்த 10 நாட்களுக்கு மேலாக தக்காளி வரத்து குறைந்ததால், அதிகபட்சமாக ஒரு கிலோ தக்காளி ரூ.160-க்கு விற்பனையானது. தொடர்ந்து வரத்து குறைந்து இருந்ததால், தக்காளி விலை கிலோ ரூ.100-க்கு குறையாமல் இருந்தது. தற்போது வரத்து அதிகரித்து, சில்லறை விற்பனையில் தக்காளி ஒரு கிலோ ரூ.60 முதல் ரூ.70 வரை விற்கப்படுகிறது.