ராமேசுவரம்: வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் பாம்பன் துறைமுகத்தில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
வங்கக் கடலின் தென் கிழக்கு பகுதியில் செவ்வாய்க் கிழமை காலை புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இது மேற்கு, வட மேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நேற்று மாறியது. ஆந்திராவின் விசாகப்பட்டினத்தில் இருந்து 470 கி.மீ. தொலைவிலும், ஒடிசாவில் இருந்து 620 கி.மீ தொலைவிலும் நிலை கொண்டுள்ளது.
அது புயல் சின்னமாக மாற வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதனால் நேற்று பாம்பன் உள்ளிட்ட தமிழகம் மற்றும் புதுச்சேரியின் 9 துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது.
வங்கக் கடலில் மீன் பிடிக்கச் சென்றுள்ள மீனவர்கள் உடனடியாக கரைக்கு திரும்புமாறும், கரையோரங்களில் படகுகள் மற்றும் மீன் பிடி உபகரணங்களை பாதுகாப்பாக வைத்துக் கொள்ளுமாறும் மீன்வளத்துறை அறிவுறுத்தி உள்ளது.