புதுடெல்லி: நாடாளுமன்றத்தில் மகளிர் மசோதாவுக்கு கிடைத்த ஆதரவு சட்டப்பேரவை தேர்தலில் கிடைக்காத நிலை உள்ளது. ராஜஸ்தான், மத்தியபிரதேச தேர்தலில் பாஜக மற்றும் காங்கிரஸ் சார்பில் குறைவான மகளிருக்கே வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்றம், சட்டப்பேரவை களில் மகளிருக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் மசோதா பல ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டிருந்தது. அந்தமசோதா பாஜக அரசால் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இது உடனடியாக அமலுக்கு வர வாய்ப்பில்லை என்றாலும், காங்கிரஸ் உள்ளிட்ட பெரும்பாலான கட்சிகள் இதற்கு ஆதரவு அளித்தன. இந்த ஆதரவு தற்போது நடைபெறும் சட்டப்பேரவை தேர்தலில் கிடைக்காத நிலை உள்ளது.
காங்கிரஸ் ஆளும் ராஜஸ்தானில் 200 பேரவை தொகுதிகளில் மொத்தம் 1,875 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இதில் ஆண்கள் 1,692 ஆக உள்ள நிலையில், பெண்கள் 183 பேர் மட்டுமே உள்ளனர்.
இந்த 183-ல் பாஜக வெறும் 20 பெண்களை போட்டியிட வைத்துள்ளது. காங்கிரஸில் பாஜகவை விட 8 அதிகமாக 28 பெண்கள் போட்டியிடுகின்றனர். இந்தப் பெண்களில் கட்சித் தலைவர்களின் உறவினர்களாக காங்கிரஸில் 3 பேரும் பாஜகவில் 2 பேரும் உள்ளனர்.
ராஜஸ்தானில் கடந்த 2018 சட்டப்பேரவை தேர்தலில் 189 பெண்கள் போட்டியிட்டனர். இதில் 24 பேர் வெற்றி பெற்றனர். நேரடிப் போட்டி நிலவும் பாஜக, காங்கிரஸ் தவிர 78 சிறிய கட்சிகளும் இங்கு போட்டியில் உள்ளன. இக்கட்சிகள் சார்பில் ஓரிரு பெண்கள் மட்டுமே நிறுத்தப்பட்டுள்ளனர்.
.
பாஜக ஆளும் மத்தியபிரதேசத்திலும் இதே நிலை உள்ளது. இங்கு 2.72 கோடி பெண் வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் காங்கிரஸ் 30, பாஜக 25 பெண்களுக்கு மட்டுமே வாய்ப்பளித்துள்ளன. இதர கட்சிகள் சார்பில் ஒருசில பெண்களே போட்டியில் உள்ளனர். ம.பி.யில் கடந்த 2018 சட்டப்பேரவை தேர்தலில் 245 பெண்கள் போட்டியிட்டு 21 பேர் வெற்றி பெற்றனர். இதில், பாஜகவில் 11, காங்கிரஸில் 9 பெண்கள் வெற்றி பெற்றிருந்தனர்.
மத்திய பிரதேச மாநில முதல்வர் சிவராஜ்சிங் சவுகானின் அமைச்சரவையில் 3 பெண்கள் இடம்பெற்றிருந்தனர். இவர்களில் 2 பேர் தங்கள் உடல்நிலையை காரணம் காட்டி இந்தமுறை போட்டியிடவில்லை. இதனால், ம.பி.யின் பாஜக அரசு பெண்களுக்காக தாங்கள் அமல்படுத்திய சிறப்பு திட்டங்களை முன்னிறுத்தி வாக்குகளை பெற முயற்சிக்கிறது.
காங்கிரஸ், பாஜக ஆகிய இரண்டு பெரிய கட்சிகளிலும் பெண் தலைவர்களின் எண்ணிக்கையும் குறைந்து விட்டது. இதனால், காங்கிரஸ் கட்சி சார்பில் அதன் தேசியப் பொதுச் செயலாளர் பிரியங்கா வதேரா நட்சத்திரப் பிரச்சாரகராக உள்ளார். பாஜக, மத்திய அமைச்சரான ஸ்மிருதி இரானியை நம்பி உள்ளது.
ராஜஸ்தானில் பாஜக முக்கியத்தலைவரும் முன்னாள் முதல்வருமான வசுந்தரா ராஜே சிந்தியாவை கட்சி மேலிடம் அதிகம் பயன்படுத்த விரும்பவில்லை என்று கூறப்படுகிறது.