ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் சட்டப்பேரவைக்கு 25-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. அங்கு மொத்தம் உள்ள200 தொகுதிகளில் 1,875 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இதில் 1,692 பேர் ஆண்கள், 183பேர் பெண்கள். இதில் 4 தொகுதிகளில் கணவன், மனைவி உட்பட நெருங்கிய உறவினர்களுக்கு இடையே போட்டி ஏற்பட்டுள்ளது.
சிகார் மாவட்டம் தண்டா ராம்கர் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ.வாக வீரேந்திர சவுத்ரி உள்ளார். இவர் இதே தொகுதியில் காங்கிரஸ் சார்பில் மீண்டும் போட்டியிடுகிறார். இதே தொகுதியில், சவுத்ரியை எதிர்த்து அவரது மனைவி ரீட்டா, ஹரியாணா மாநிலத்தைச் சேர்ந்த ஜன்நாயக் ஜனதா கட்சி (ஜேஜேபி) சார்பில் போட்டியிடுகிறார்.
வீரேந்திர சவுத்ரியின் தந்தை நாராயண் சிங் காங்கிரஸ் சார்பில் 7 முறை எம்.எல்.ஏ.வாக பதவி வகித்துள்ளார். இவரது குடும்பம் பாரம்பரியமாக காங்கிரஸ் கட்சியின் அங்கமாக இருந்து வருகிறது. இந்நிலையில், ரீட்டா கடந்த ஆகஸ்ட் மாதம் ஜேஜேபி கட்சியில் இணைந்தார். கடந்த 2018 தேர்தலில் தனக்கு போட்டியிட வாய்ப்பு கொடுக்காததால் காங்கிரஸ் மீது ரீட்டா அதிருப்தியில் இருந்ததாகக் கூறப்படுகிறது.
இதுபோல தோல்பூர் தொகுதியில் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த இருவர் வெவ்வேறு கட்சி சார்பில் போட்டியிடுகின்றனர். கடந்த 2018 தேர்தலில் தோல்பூர் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்ட ஷோபாராணி குஷ்வா வெற்றி பெற்றார். இவர் தன்னை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட தனது மாமனாரான ஷிவ்சரண் குஷ்வாவை தோற்கடித்தார்.
இந்நிலையில், கடந்த ஆண்டு மாநிலங்களவை தேர்தலின்போது கட்சி மாறி வாக்களித்த ஷோபாராணி பாஜகவிலிருந்து நீக்கப்பட்டார். இதையடுத்து, காங்கிரஸில் இணைந்த அவர் அக்கட்சியின் சார்பில் தோல்பூர் தொகுதியில் போட்டியிடுகிறார். அதேநேரம் ஷிவ்சரண் இதே தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடுகிறார்.
காங்கிரஸ் முன்னாள் எம்.பி. ஜோதி மிர்தா சமீபத்தில் பாஜகவில் இணைந்தார். அவர் நகாவுர் தொகுதியில் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து அவரது மாமனார் ஹரேந்திர மிர்தா காங்கிரஸ் சார்பில் போட்டியிடுகிறார்.
கேத்ரி தொகுதியில் தரம்பால் குர்ஜார் பாஜக சார்பில் போட்டியிடுகிறார். இதனால் அதிருப்தி அடைந்த தரம்பாலின் சகோதரர் தத்தாராமின் மகள் மணிஷா குர்ஜார் காங்கிரஸில் இணைந்தார். அதே தொகுதியில் மணிஷாவை வேட்பாளராக காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.