Sunday , December 3 2023
1152679

“ரத்தத்தில் மெத்தில் ஆல்கஹால்…” – கலாபவன் மணி இறப்பு குறித்து ஐபிஎஸ் அதிகாரி தகவல் | Investigation officer reveals truth behind death of Kalabhavan Mani 

திரிச்சூர்: “கலாபவன் மணி ஒரு நாளைக்கு 12,13 பாட்டில்கள் பீர் குடிப்பது வழக்கம். அவர் அருந்திய பீர் பாட்டில்கள் சேகரிக்கப்பட்டு ஆய்வுக்கு அனுப்பப்பட்டன. இதில் சிறிய அளவு மெத்தில் ஆல்கஹால் கண்டுபிடிக்கப்பட்டது. கல்லீரல் பாதிப்பு இருந்தும் அவர் தொடர்ந்து குடித்து வந்ததால் அவரது மரணத்தை அவரே தேடிக்கொண்டார்” என ஐபிஎஸ் அதிகாரி உன்னிராஜன் தெரிவித்துள்ளார்.

மலையாளம் மற்றும் தமிழ் சினிமாவில் புகழ்பெற்ற நடிகராக வலம் வந்த கலாபவன் மணி கடந்த 2016-ம் ஆண்டு மார்ச் 6-ம் தேதி திடீரென்று மரணமடைந்தார். திரிச்சூர் மாவட்டம் சாலக்குடி அருகே தன் பண்ணை வீட்டில் நண்பர்களுடன் மது அருந்திக்கொண்டிருந்தபோது அவர் மயங்கி விழுந்தார். பின்னர், மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டும், சிகிச்சை பலனளிக்காமல் மரணமடைந்தார். இறக்கும்போது அவருக்கு வயது 45. கலாபவன் மணி இறப்பில், சந்தேகம் இருப்பதாக உறவினர்கள் குற்றம் சாட்டினர். உடற்கூறாய்வில், அவரின் உடலிலிருந்து காய்கறிப் பயிர்களுக்கு அடிக்கப்படும் பூச்சிக்கொல்லி மருந்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, அவர் விஷம் கொடுத்துக் கொல்லப்பட்டிருக்கலாம் என்று சந்தேகம் வலுத்தது. தொடர்ந்து, இந்த வழக்கு சி.பி.ஐ வசம் ஒப்படைக்கப்பட்டது. கொச்சியில் உள்ள கேரள உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதியிடம் சி.பி.ஐ அளித்த அறிக்கையில் கலாபவன் மணி கொல்லப்படவில்லை என்று தெரிவித்து 35 பக்க அறிக்கையை தாக்கல் செய்தது.

இந்நிலையில், இந்த விசாரணை குழுவில் இடம்பெற்றிருந்த ஐபிஎஸ் அதிகாரியான உன்னிராஜன், மலையாள செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில் அவர், “கலாபவன் மணி இறப்பதற்கு முந்தைய நாள் அவரது வீட்டுக்கு வந்த ஜாபர் இடுக்கி, தரிக்கிட சாபு உள்ளிட்ட நண்பர்களிடம் இருந்து விரிவான வாக்குமூலம் பெறப்பட்டது. கலாபவன் மணியின் ரத்தப் பரிசோதனை அறிக்கையில் அவரது ரத்தத்தில் மெத்தில் ஆல்கஹாலின் தடயங்கள் இருப்பது கண்டறியப்பட்டது. பொதுவாக மதுபானம் அருந்தும்போது உடலில் எத்தில் ஆல்கஹாலின் தடயங்கள் இருக்கும். ஆனால், இவரது உடலில் மெத்தில் ஆல்கஹால் இருந்தது. வழக்கமாக மெத்தில் ஆல்கஹாலை பெயின்டை நீக்கவும், இன்ன பிற விஷயங்களுக்காகவும் பயன்படுத்துவார்கள்.

100 மில்லி கிராம் ரத்தத்தில் 30 மில்லி கிராமுக்கும் அதிகமாக மெத்தில் ஆல்கஹால் இருந்தால் அது உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்தும். பட்டச் சாராய வகை மதுபானங்களில் மெத்தில் ஆல்கஹால் கலப்பது உண்டு. கலாபவன் மணியின் ரத்தத்தில் பூச்சிக்கொல்லிகளுக்கான தடயங்களும் கண்டறியப்பட்டன. மெத்தில் ஆல்கஹால் மற்றும் பூச்சிக்கொல்லிகள் அவரது ரத்தத்தில் எப்படி கலந்து என்பது தொடர்பான விசாரணை நடைபெற்றது.

பட்டச்சாரயத்தை குடித்தாரா அல்லது அவரது நண்பர்கள் யாராவது கொடுத்தார்களா என விசாரித்தோம். ஆனால், அது குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை. மணி நிறைய பச்சை காய்கறிகளை சாப்பிட்டு வந்துள்ளார். காய்கறிகள் மூலம் பூச்சிக்கொல்லி மருந்து அவரது உடலுக்குள் வந்ததா என்பது குறித்து தீவிரமாக விசாரிக்கப்பட்டது. சம்பவத்தன்று அவர் இறைச்சி அல்லது சாராயத்தை உட்கொண்டதற்கான எந்த ஆதாரமும் இல்லை. அப்போது அவர் பீர் மட்டுமே குடித்தார்.

மணி ஒரு நீரிழிவு நோயாளி. அதற்காக அவர் மருந்து சாப்பிட்டு வந்தார். ஆனால், நீண்ட நாட்களாக மருத்துவரை அணுகாமல் இருந்துள்ளார். அவர் சாப்பிட்டு வரும் மருந்துடன், மது அருந்தக் கூடாது. இரண்டுக்குமான ரசாயன மாற்றம் உடலின் ஆரோக்கியத்தை முழுமையாக பாதிக்கும். இதனால் மணி உடல்ரீதியாக பலவீனமடைந்தார். உடல் நிலை மோசமடைய, யாரிடமும் சொல்லாமல் தனது சட்டையின் உள்பக்கம் ஓரிரு ஸ்வெட்டர்களை அணிந்திருக்கிறார்.

அவர் தினமும் பன்னிரண்டு, பதின்மூன்று பாட்டில்கள் பீர் குடிப்பது வழக்கம். அவர் அருந்திய அனைத்து பீர் பாட்டில்களும் சேகரிக்கப்பட்டு ஆய்வுக்கு அனுப்பப்பட்டன. அந்த பீரில் சிறிய அளவு மெத்தில் ஆல்கஹால் கண்டுபிடிக்கப்பட்டது. அதன்பிறகு, திருவனந்தபுரத்தில் உள்ள மருத்துவக் குழு மரணம் எதற்காக நடந்தது என்று விரிவாக ஆலோசித்தது.

தனது உதவியாளரின் கல்லீரல் சிகிச்சைக்காக ரூ.10 லட்சம் பணத்தை கொடுத்து உதவிய கலாபவன் மணி தனது சொந்த உடலை பாதுகாக்க தவறிவிட்டார். கல்லீரல் பாதிக்கப்பட்டு, ரத்த வாந்தி எடுத்த போதிலும் அவர் பீர் குடிப்பதை நிறுத்தவில்லை. பீரில் குறைந்த அளவு மெத்தில் ஆல்கஹால் மட்டுமே உள்ளது என்றாலும், அதிக அளவில் அவர் உட்கொண்டதால் அது உடலை பாதிக்கச் செய்துவிட்டது. அவர் உயிரிழந்த தினத்தன்றும் அதற்கு முந்தைய நாட்களிலும் அவர் அதிக அளவில் பீர் குடித்துள்ளார்.

அவர் பீர் பழக்கத்துக்கு அடிமையாகிவிட்டாரா அல்லது கல்லீரல் பாதிப்பு பற்றி அறிந்திருந்தும் அவர் அதிக அளவு பீர் உட்கொண்டாரா என்பதும் உறுதியாகத் தெரியவில்லை. நாங்கள் விசாரித்த நிலையில் இந்த வழக்கு சிபிஐ வசம் சென்றது. ஆனால், எங்களது விசாரணை மிகவும் நுணுக்கமாக இருந்ததால், சிபிஐயும் அதே முடிவை எட்டியது. நாங்கள் ரசித்த மற்றும் நேசித்த ஒரு நடிகரின் மரணத்தின் பின்னணியில் உள்ள உண்மையைக் கண்டறிய நாங்கள் போராடினோம். சுருக்கமாக சொல்வதென்றால் கலாபவன் மணி அவரது மரணத்தை அவரதே தேடிக்கொண்டார்” என்றார்.

Thanks

Check Also

1162636

திரை விமர்சனம்: அன்னபூரணி | annapoorani movie review

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் சுவாமிக்கு பிரசாதம் செய்யும் குடும்பத்தில் பிறந்தவர் அன்னபூரணி ( நயன்தாரா). சிறு வயதிலிருந்தே உணவு சமைப்பதில் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *