புதுடெல்லி: இரண்டு நாட்களுக்கு முன்பு ஓபன் ஏஐ (OpenAI) நிறுவனத்தில் இருந்து இருந்து நீக்கப்பட்ட சாம் ஆல்ட்மேன் மற்றும் கிரேக் பரோக்மேன் ஆகிய இருவரும் மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் இணைந்து பணியாற்றவிருப்பதாக மைக்ரோசாஃப்ட் அந்நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி (சிஇஓ) சத்யா நாதெள்ளா தெரிவித்துள்ளார்.
மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி (சிஇஓ) சத்யா நாதெள்ளா இது குறித்து தனது எக்ஸ் தளத்தில், “ஓபன் ஏஐ உடனான பார்ட்னர்ஷிப்பில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். எங்களுடைய செயல்பாடுகளில் நம்பிக்கை வைத்திருக்கிறோம். எம்மெட் ஷீர் (Emmett Shear ) மற்றும் ஓபன் ஏஐ நிறுவனத்தின் புதிய தலைமைக் குழுவைப் பற்றி அறிந்து, அவர்களுடன் இணைந்து பணியாற்ற ஆவலுடன் காத்திருக்கிறோம். மைக்ரோசாஃப்ட் இன்சைட்டில் நாங்கள் அறிவித்த அனைத்தையும் தொடர்ந்து புதுப்பிக்கும் பணியில் ஈடுபடவிருக்கிறோம். எங்களது வாடிக்கையாளர்களுக்கும், பார்ட்னர்களுக்கும் தொடர்ந்து ஆதரவு கரம் நீட்டுவோம்.
சாம் ஆல்ட்மேன் மற்றும் கிரெக் ப்ரோக்மேன் ஆகிய இருவரும் மைக்ரோசாப்ட் உடன் இணைந்து புதிய மேம்பட்ட செயற்கை நுண்ணறிவுக் குழுவை வழி நடத்துவார்கள் என்ற செய்தியை பகிர்ந்து கொள்வதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். அவர்களின் வெற்றிக்குத் தேவையான அனைத்தையும் விரைவில் வழங்கத் தயாராக இருக்கிறோம். இந்தப் புதிய குழுவின் தலைமை நிர்வாக அதிகாரிகளாக அவர்கள் சேர்வதில் நான் மிகவும் மகிழ்ச்சி கொள்கிறேன். சாம் ஆல்ட்மேன் புதுமைக்கான புதிய வேகத்தை அமைத்துள்ளார். கிட்ஹப், மொஜாங் ஸ்டுடியோஸ் மற்றும் லிங்க்ட்இன் உள்ளிட்ட மைக்ரோசாஃப்ட் நிறுவனங்களுக்குள் தனிப்பட்ட அடையாளங்கள் மற்றும் கலாசாரங்களை உருவாக்க நிறுவனர்களுக்கும் கண்டுபிடிப்பாளர்களுக்கும் இடம் கொடுப்பது பற்றி பல ஆண்டுகளாக நாங்கள் நிறைய கற்றுக்கொண்டுள்ளோம்” என்று சத்யா நாதெள்ளா தெரிவித்துள்ளார்.
என்ன நடந்தது? – இரண்டு நாட்களுக்கு முன்பு ஓபன் ஏஐ நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியான (சிஇஓ) சாம் ஆல்ட்மேன் நீக்கப்பட்டார். அவருக்குப் பதிலாக இடைக்கால சிஇஓ-வாக 34 வயதான மீரா மூர்த்தி நியமிக்கப்பட்டுள்ளார். அல்பேனியாவில் பயின்று கனடாவில் கல்வி பயின்ற மீரா மூர்த்தி ஓபன் ஏஐ நிறுவனத்தில் மிக முக்கியப் பொறுப்பு வகித்துவந்தார். சாட் ஜிபிடி, DALL E உள்பட பல்வேறு தொழில்நுட்பங்கள் உருவாக்கத்திலும் அவர் முக்கியப் பங்கு வகித்தார். திரைமறைவில் இருந்த அவரது புகழ் தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
இது தொடர்பாக சாட் ஜிபிடியின் தாய் நிறுவனமான ஓபன் ஏஐ வெளியிட்ட அறிவிப்பில், நிர்வாக இயக்குநர்களின் கூட்டத்தில் சாம் ஆல்ட்மேனின் செயல்பாடுகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. அவரிடம் பல விஷயங்களில் வெளிப்படைத் தன்மை இல்லை என்பதை உறுதி செய்தோம். நிர்வாகக் குழு அவர் மீது கொண்டிருந்த நம்பிக்கையை இழந்துவிட்டது. அவர் இனியும் ஓபன் ஏஐ நிறுவனத்தை முன்னின்று நடத்தமுடியும் எனத் தோன்றவில்லை. அதனால் அவர் நீக்கப்படுகிறார் எனத் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.