சென்னை: ”திமுக அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் முதல்வரின் தொகுதியிலேயே, கேங்மேன் பணிகளுக்குத் தேர்வு செய்யப்பட்ட சுமார் 800 விடுபட்ட கேங்மேன்கள் போராட்டம் நடத்திவிட்டார்கள் என்ற எண்ணத்தில், அவர்களுக்கு சம்மன் வழங்க முயற்சிக்கும் திமுக அரசின் காவல்துறை, அம்முயற்சியை கைவிட வேண்டும்” என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அதிமுக அரசில், தமிழ்நாடு மின்சார வாரியத்தில் களப் பணி செய்வதற்குத் தேவையான உடல் தகுதியுள்ள ஆட்கள் தேவைப்பட்டதால், `கேங்மேன்’ என்ற புதிய பணியிடம் தோற்றுவிக்கப்பட்டது. அதன்படி, கேங்மேன் பதவிக்காக 2019-ஆம் ஆண்டு உடற்கூறு தகுதித் தேர்வினை (Physical Test) 100 சதவீத நேர்மையுடன் அதிமுக அரசு நடத்தியது.