கொல்கத்தா: மேற்கு வங்கத்திற்கு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக ஸ்பெயின், ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளுக்கு முதல்வர் மம்தா பானர்ஜி 12 நாள் பயணமாக புறப்பட்டார்.
கடந்த 12-ம் தேதி ஸ்பெயின் சென்றடைந்த அவர், அங்கு மாட்ரிட், பார்சிலோனா ஆகிய நகரங்களுக்கு பயணம் செய்தார். மம்தா தனது பயணத்தில் பல்வேறு முதலீட்டாளர்கள் மற்றும் வெளிநாடுவாழ் இந்தியர்களை சந்தித்தார். மேற்கு வங்கத்தில் கால்பந்து விளையாட்டை ஊக்குவிக்க ஸ்பெயின் கால்பந்து அமைப்பான லா லிகா உடன் மேற்கு வங்க அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திட்டது உட்பட இப்பயணத்தில் பல்வேறு முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
முதல்வருடன் தலைமைச் செயலாளர் எச்.கே. துவிவேதி உள்ளிட்ட உயரதிகாரிகள் சென்றுள்ளனர். இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி, லண்டன் நகரில் இருந்து மாட்ரிக் நகருக்கு வந்து, மேற்கு வங்க பிரதிநிதிகள் குழுவுடன் இணைந்து கொண்டார்.
உச்சி மாநாட்டில் பங்கேற்பு: இந்நிலையில் முதல்வர் மம்தா தனது ஸ்பெயின் பயணத்தை முடித்துக்கொண்டு நேற்று காலை ஐக்கிய அரபு அமீரகம் சென்றடைந்தார். இங்கு வணிக உச்சி மாநாடு உட்பட பல்வேறு கூட்டங்களில் பங்கேற்கும் அவர் வெளிநாடு வாழ் இந்தியர்களையும் சந்திக்கிறார்.
இந்நிலையில் துபாயில் லுலு பன்னாட்டு குழும அதிகாரிகளை முதல்வர் மம்தா இன்று சந்திக்கவிருப்பதாக மேற்கு வங்க அதிகாரிகள் தெரிவித்தனர்.