Saturday , December 9 2023
1153219

முகாம்கள் முதல் அவசரகால மையங்கள் வரை – தமிழக அரசின் ‘மழை பாதிப்பு முன்னெச்சரிக்கை’ நடவடிக்கைகள் | Rain damage Govt orders Collectors to provide immediate relief for loss of lives and damage to houses

சென்னை: மழை பாதிப்புக்குள்ளாகும் மக்களை முன்கூட்டியே நிவாரண முகாம்களில் தங்க வைக்கவும், நிவாரண முகாம்களில் பாதுகாக்கப்பட்ட குடிநீர், மருத்துவ வசதி, மின்சாரம் மற்றும் இதர அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கவும், மனித உயிரிழப்பு, கால்நடை இறப்பு மற்றும் சேதமடைந்த குடிசை, வீடுகளுக்கு உடனடியாக நிவாரணம் வழங்கவும் மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. பல்வேறு மாவட்டங்களில் கனமழை, முன்னெச்சரிக்கை மற்றும் நிவாரண நடவடிக்கைகள் குறித்து வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் மாவட்ட அவசரகால செயல்பாட்டு மையத்தில் இன்று ஆய்வு மேற்கொண்டார்.

வடகிழக்கு பருவமழை அக்.21 அன்று தொடங்கியதிலிருந்து, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. தமிழகத்தில், அக்.1 முதல் நவ.13ம் தேதி வரை 221.7 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. இது இயல்பான மழையளவைக் காட்டிலும் 17 விழுக்காடு குறைவு ஆகும். வடகிழக்கு பருவமழைக் காலத்தில் நவ.13 முடிய, 8 மாவட்டங்களில் அதிக மழைப்பொழிவும், 7 மாவட்டங்களில் இயல்பான மழைப்பொழிவும், 23 மாவட்டங்களில் குறைவான மழைப்பொழிவும், ஏற்பட்டுள்ளது.

இன்று (நவ.14) காலை 8.30 மணி வரை 35 மாவட்டங்களில் 13.25 மி.மீ. மழை பெய்துள்ளது. நாகப்பட்டினம் மாவட்டத்தில் அதிகபட்சமாக 11.3 செ.மீட்டர் மழை பதிவாகியுள்ளது. 5 இடங்களில் மிக கனமழையும், 30 இடங்களில் கனமழையும் பதிவாகியுள்ளது. தமிழக முதல்வர் கடந்த 19.09.2023 அன்று ஆய்வுக் கூட்டம் நடத்தி, வடகிழக்குப் பருவமழைக்கென மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அனைத்து துறை அரசு அலுவலர்களுக்கும் அறிவுரை வழங்கினார்.

இந்திய வானிலை ஆய்வு மையத்தின் 13.11.2023-ம் நாளிட்ட அறிவிக்கையில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை மற்றும் மிக கனமழை ஏற்பட கூடுமென்று தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து தமிழக முதல்வரின் அறிவுரையின் பேரில் பின்வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

  • கனமழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ள 27 மாவட்டங்களில் தக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர்களுக்கு கூடுதல் தலைமைச் செயலர், வருவாய் நிருவாக ஆணையர் மற்றும் மாநில நிவாரண ஆணையரின் 13.11.2023 நாளிட்ட கடிதம் மூலம் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
  • முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்காக, அரியலூர், கடலூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை மற்றும் நாகப்பட்டினம் ஆகிய 7 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. திருவண்ணாலை மாவட்டத்தில் பள்ளிகளுக்கும், திண்டுக்கல் மாவட்டத்தில் கொடைக்கானல் வட்டத்திலும், புதுக்கோட்டை மாவட்டத்தில் கந்தர்வகோட்டை மற்றும் கரம்பக்குடி ஆகிய இரு வட்டங்களிலும் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
  • மேலும், 13.11.2023 மற்றும் 14.11.2023 நாட்களில் தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் மணிக்கு 40 முதல் 55 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும் என்றும், இப்பகுதிகளில் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள நிலையில், இந்த தகவலை ஆழ்கடலில் உள்ள மீனவர்களுக்கும், கரையில் உள்ள மீனவர்களுக்கும் தெரிவிக்குமாறு மீன்வளத்துறை ஆணையர் மற்றும் கடலோர மாவட்ட ஆட்சியர்கள் வாயிலாக கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
  • திருவள்ளூர், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருவாரூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை, தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களின் கண்காணிப்பு அலுவலர்கள் தொடர்புடைய மாவட்டங்களுக்கு விரைந்து சென்று முன்னெச்சரிக்கை மற்றும நிவாரணப் பணிகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
  • மாநில, மாவட்ட அவசரகால செயல்பாட்டு மையங்கள் 24 மணி நேரமும் முறையே 1070 மற்றும் 1077 என்ற கட்டணமில்லா தொலைபேசிகளுடனும், கூடுதலான அலுவலர்களுடனும் இயங்கி வருகின்றன.
  • பொதுமக்கள், Whatsapp எண்.94458 69848 மூலம் புகார்களை பதிவு செய்யலாம்.
  • 424 கடலோரப் பகுதிகளில் நிறுவப்பட்டுள்ள முன் எச்சரிக்கை அமைப்புகள் மூலம் சைரன் ஒலி, நேரடி ஒளிபரப்பு மூலம் எச்சரிக்கைகள் மற்றும் பதிவு செய்யப்பட்ட எச்சரிக்கை செய்திகள் பரப்பப்படுகின்றன.
  • பொதுவான முன்னெச்சரிக்கை நடைமுறை மூலம் பொதுமக்களுக்கு புயல், வெள்ள அபாய எச்சரிக்கை வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
  • TNSMART செயலி மூலமாகவும், அச்சு, மின்னணு மற்றும் சமூக ஊடகங்கள் வாயிலாகவும் பொதுமக்களுக்கு உரிய காலத்தில் வானிலை முன்னறிவிப்பு, வெள்ள அபாய எச்சரிக்கை மற்றும் மின்னல் எச்சரிக்கை வழங்கப்படுகிறது.
  • கடலோர மாவட்டங்களில் 1.13 லட்சம் நபர்கள் தங்கும் வகையில் 121 பல்நோக்கு பாதுகாப்பு மையங்கள் தயார் நிலையில் உள்ளன.
  • பள்ளிகள், கல்லூரிகள், சமூகக் கூடங்கள் மற்றும் திருமண மண்டபங்கள் என மொத்தம் 4967 நிவாரண முகாம்கள் தயாராக வைக்கப்பட்டுள்ளன.
  • பெருநகர சென்னை மாநகராட்சியை பொறுத்தமட்டில் 169 நிவாரண முகாம்கள் உள்ளதோடு, மழைநீரை வெளியேற்ற 260 பம்புகள் தயாராக வைக்கப்பட்டுள்ளன.
  • பேரிடர் காலங்களில் தேடல், மீட்பு பணிகளை துரிதமாக மேற்கொள்ளும் பொருட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள பழனி, திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள மணிமுத்தாறு, கோயம்புத்தூர் மற்றும் திருச்சிராப்பள்ளி ஆகிய மாவட்டங்களில் தமிழ்நாடு பேரிடர் மீட்பு படையின் 400 வீரர்கள் கொண்ட 12 குழுக்கள் நிலைநிறுத்தப்பட்டுள்ளன.
  • மேலும், தேசிய பேரிடர் மீட்புப்படையின் 200 நபர்கள் அரக்கோணம் மற்றும் சென்னையில் தயார் நிலையில் உள்ளனர்.
  • பாதிப்புக்குள்ளாகும் மக்களை முன்கூட்டியே நிவாரண முகாம்களில் தங்க வைக்கவும், நிவாரண முகாம்களில் பாதுகாக்கப்பட்ட குடிநீர், மருத்துவ வசதி, மின்சாரம் மற்றும் இதர அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கவும்;
  • மனித உயிரிழப்பு, கால்நடை இறப்பு மற்றும் சேதமடைந்த குடிசை, வீடுகளுக்கு உடனடியாக நிவாரணம் வழங்கவும் மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் ஆய்வின் போது கூடுதல் தலைமைச் செயலாளர், வருவாய் நிருவாக ஆணையர் எஸ்.கே. பிரபாகர், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை இயக்குநர், சி. அ.ராமன், ஆகிய அலுவலர்கள் உடன் இருந்தனர் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Thanks

Check Also

1164932

புதுச்சேரியில் ரூ.393 கோடியில் ப்ரீபெய்டு ஸ்மார்ட் மீட்டர் பொருத்த அரசு அனுமதி – நடைமுறை என்ன? | Govt approves Rs 393 crore prepaid smart meter installation in Puducherry

புதுச்சேரி: புதுச்சேரியில் ரூ.393 கோடியில் ப்ரீபெய்ட் ஸ்மார்ட் மீட்டர் பொருத்த அரசு அனுமதி தந்துள்ளது. மின் மீட்டருக்கான பணத்தை 90 …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *