சென்னை: சிறிய மற்றும் விளிம்புநிலை விவசாயிகளுக்கு 3,332 விஎஸ்டி பவர் டில்லர் சாதனங்களை மானிய விலையில் தமிழ்நாடு அரசு வழங்கி உள்ளது.
தமிழ்நாட்டில் சிறிய பரப்பிலான வயல்கள், தோட்டங்களில் இயந்திரங்களின் பயன்பாட்டை அதிகரித்தல், விவசாயிகள் எதிர்கொள்ளும் சவால்களை குறைத்தல் மற்றும் வேளாண் உற்பத்தி திறனை உயர்த்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. அந்த வகையில் சென்னையில், பவர் டில்லர்களை விவசாயிகளுக்கு வழங்கும் திட்டத்தை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அதைத் தொடர்ந்து மாநிலம் முழுவதும் நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் பங்கேற்றனர். இந்ததிட்டத்துக்காக தேர்வு செய்யப்பட்டிருக்கும் விவசாயிகள், கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த பண்ணை மேம்பாட்டுத் திட்டத்தின் (KAVIADP) கீழ் பயனடையும் கிராமங்களை சேர்ந்தவர்கள் ஆவர்.
இந்தியாவில் சிறிய மற்றும் விளிம்புநிலை விவசாயிகளுக்குப் பொருத்தமான திறன்மிக்க வேளாண் சாதனமாக விஎஸ்டி பவர் டில்லர்கள் திகழ்கின்றன. இந்த இயந்திரங்களை வரப்பு உருவாக்கல், ஊடு சாகுபடி, களையகற்றல் மற்றும் சேற்றுழவு ஆகிய பணிகளுக்கு பயன்படுத்த முடியும். குறிப்பாக, இஞ்சி, மஞ்சள், காய்கறி, பருத்தி மற்றும் தோட்டப் பயிர்கள் ஆகியவற்றுக்கு இதனை பயன்படுத்தலாம்.