கிருஷ்ணகிரி: இயற்கை முறையில் மண் வளத்தை மேம்படுத்த, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் விவசாயிகள் சிலர் மாந்தோட்டங்களில் ஊடுபயிராக சணப்பை பயிரிட்டுள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 35 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் மா சாகுபடி செய்யப்படுகிறது. மாந்தோட்டங்களில் உள்ள மரங்களில் பூச்சி தாக்குதல் உள்ளிட்டவை கட்டுப்படுத்த விவசாயிகள் அதிகளவில் ரசாயன உரங்களை தெளிக்கின்றனர். அவ்வாறு தெளிக்கப்படும் ரசாயன பூச்சிக் கொல்லி மருந்துகளால் மண் வளம் பாதிக்கப்படுகிறது.
குறிப்பாக மண் மலட்டுத்தன்மை அடையும் அபாயம் உள்ளதாக இயற்கை ஆர்வலர்கள் எச்சரித்து வருகின்றனர். இந்நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த மா விவசாயிகள் சிலர், இயற்கை முறையில் மண் வளத்தை மேம்படுத்துவதில் மாந்தோட்டங்களில் ஊடுபயிராக பசுந்தாள் உரப்பயிர்களில் ஒன்றான சணப்பையை மாந்தோப்புக்கு இடையில் ஊடுபயிராக சாகுபடி செய்துள்ளனர்.
கரிம, கனிம சத்துக்கள்: இதுகுறித்து கிருஷ்ணகிரி வேளாண்மை உதவி இயக்குநர் சுரேஷ்குமார் கூறியதாவது: தக்கைப்பூண்டு, கொழிஞ்சி, சணப்பை போன்ற பசுந்தாள் உரப்பயிர்களை சாகுபடி செய்து குறிப்பிட்ட பருவத்தில் மடக்கி உழும்போது நல்ல உரமாகிறது. அந்த வகையில், 90 நாள் பயிரான சணப்பையை, 40 நாட்கள் வளர்ந்த நிலையில் மடக்கி உழுவதன் மூலம் மண் வளத்தை அதிகரிக்க முடியும். இவ்வாறு பூ பூக்கும் சமயத்தில் மடக்கி உழுவதால் காற்றிலுள்ள நைட்ரஜன் உறிஞ்சப்பட்டு மண்ணுக்கு கிடைக்கிறது. மேலும் இந்த செடி மக்கி மண்ணுடன் கலந்துவிடுவதால், கரிம, கனிம சத்துக்கள் கிடைக்கின்றன.
நீர் உறிஞ்சும் திறன் அதிகரிக்கும்: அத்துடன் மண்ணில் நன்மை செய்யும் பாக்டீரியாக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கச் செய்கிறது. இதனால் மண்ணின் நீர் உறிஞ்சும் திறன் அதிகரித்து நல்ல மகசூல் பெற முடியும். மேலும் நன்மை செய்யும் பூச்சிகள் பாதுகாக்கப்படுவதால், உரம் மற்றும் பூச்சி மருந்துகள் செலவு குறைகிறது. மா சாகுபடியில் மட்டுமல்லாமல் தென்னை, நெல் உள்ளிட்ட தானியப்பயிர்கள் மற்றும் அனைத்துவிதமான பயிர் சாகுபடியிலும் விதைப்புக்கு முன் இவ்வாறு மண் வளத்தை மேம்படுத்தலாம்.இவ்வாறு அவர் கூறினார்