மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டம் முழுவதும் நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று மாலை வரை இடைவிடாது கனமழை பெய்தது.
இந்நிலையில், திருக்கடையூர் அருகே நான்கு வழிச்சாலை பணிக்காக சாலையோரத்தில் மலைபோல பெருமளவில் குவித்து வைக்கப்பட்டிருந்த மணல் குவியல் மழையில் கரைந்து, தேசிய நெடுஞ்சாலையில் வழிந் தோடியது. இதனால், சாலை முழுவதும் சேறு, சகதியாகி நேற்று காலை வாகனங்கள் செல்ல முடியாமல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
அப்போது, அந்த வழியாக வந்த ஒரு கார் சேற்றில் சிக்கியதில் வழுக்கி, சாலையோரத்தில் இருந்த மணல் குவியலில் மோதி நின்றது. இதில், காரின் முன்பகுதி முற்றிலும் சேதமடைந்தது. ஆனாலும், அதிர்ஷ்டவசமாக காரில் பயணித்தவர்கள் பாதிப்பின்றி தப்பினர். தகவலறிந்து அங்கு வந்த தரங்கம்பாடி தீயணைப்புத் துறையினர் மணல் குவியலில் சிக்கிய காரை மீட்டனர். தொடர்ந்து, சாலையில் சரிந்து கிடந்த மணலை அகற்றும் பணி நடைபெற்றது.