புதுடெல்லி: மறு அறிவிப்பு வரும் வரை கனடா நாட்டவர்களுக்கு விசா வழங்குவது இன்று(செப்.21) முதல் நிறுத்தப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
இது தொடர்பாக விசா வழங்குவதற்காக நியமிக்கப்பட்டுள்ள தனியார் நிறுவனமான பிஎல்எஸ் இன்டர்நேஷனல் தனது இணையதளத்தில், “இந்திய தூதரகத்தின் முக்கிய அறிவிப்பு: செயல்பாட்டுக் காரணங்களுக்காக, செப்.21ம் தேதி முதல், அடுத்த அறிவிப்பு வரும்வரை இந்திய விசா சேவை நிறுத்தப்படுகிறது. மேலும் தகவல்களுக்கு பிஎல்எஸ் இணையதளத்தைப் பாருங்கள்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சீக்கிய பிரிவினைவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொல்லப்பட்டதில் இந்திய அரசின் ஏஜென்ட்களுக்கு தொடர்பு இருப்பதாக ஜஸ்டின் ட்ரூடோ குற்றம் சாட்டியதன் தொடர்ச்சியாக இருநாடுகளுக்கு இடையேயான அரசாங்க உறவில் விரிசல் ஏற்பட்டுள்ள நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
முன்னதாக, கனடாவில் காலிஸ்தான் டைகர் படைப்பிரிவின் தலைவரும், தீவிரவாதியுமான ஹர்தீப் சிங் நிஜ்ஜார் சில மாதங்களுக்கு முன்னர் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்தக் கொலையில் கனடாவில் உள்ள இந்திய தூதர் சஞ்சய் குமார் வர்மா மற்றும் டொரான்டோவில் உள்ள துணைத் தூதர் அபூர்வா வஸ்த்தவா ஆகியோர் முக்கிய பங்காற்றியுள்ளனர் என அவர்களின் போட்டோக்களுடன் கனடாவில் காலிஸ்தான் ஆதரவாளர்கள் போஸ்டர் ஒட்டினர்.
இந்நிலையில் நாடாளுமன்றத்தில் பேசிய கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, “இந்திய அரசாங்க முகவர்களுக்கும் காலிஸ்தான் தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலைக்கும் தொடர்பு இருப்பதற்கான நம்பத்தகுந்த குற்றச்சாட்டுகள் உள்ளன” என்று கூறினார். ஆனால், ஜஸ்டின் ட்ரூடோவின் குற்றச்சாட்டுகளை இந்திய அரசு திட்டவட்டமாக மறுத்துள்ளது. “கனடாவில் நிகழ்ந்த வன்முறைச் செயலுக்கு இந்திய அரசுக்கு தொடர்பு இருப்பதாக தெரிவித்துள்ள குற்றச்சாட்டு அபத்தமானது. இது உள்நோக்கம் கொண்டது. இதற்கு முன்பும் இதுபோனற குற்றச்சாட்டுகள் கனடா பிரதமரால் இந்திய பிரதமரிடம் தெரிவிக்கப்பட்டன. அப்போதே அவை முற்றிலும் நிராகரிக்கப்பட்டன” என்று இந்திய வெளியுறவுத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.