Sunday , December 3 2023
1152003

“மருத்துவமனைகள் மீதான போர்க் குற்றங்களை இஸ்ரேல் நிறுத்த வேண்டும்” – காசா மருத்துவரின் கதறல் | Gaza doctor calls for Israel’s ‘war crimes’ on hospitals to stop

டெல் அவில்: காசாவில் உள்ள மருத்துவமனைகள் மீது இஸ்ரேல் படைகள் தாக்குதல் நடத்தி வரும் நிலையில், மருத்துவமனைகள் மீதான தங்களது ‘போர்க் குற்றங்கள்’ அனைத்தையும் இஸ்ரேல் நிறுத்த வேண்டும் என்று காசா மருத்துவர் ஒருவர் வலியுறுத்தியுள்ளார்.

இஸ்ரேல் ராணுவத்துக்கும், ஹமாஸ் அமைப்பினருக்கும் இடையிலான போர் 36-வது நாளாக நீடித்து கொண்டிருக்கிறது. போர் நாளுக்கு நாள் உக்கிரமடைந்து வரும் நிலையில், கான் யூனிஸில் உள்ள அல்-நாசர் மருத்துவமனைக்கு வெளியே நடைபெற்ற ஒரு செய்தியாளர் சந்திப்பின்போது, காசாவைச் சேர்ந்த மருத்துவர் ஒருவர் பேசினார். அப்போது அவர், “காசா மருத்துவமனைகள் மீது இஸ்ரேல் நடத்தி வரும் ‘போர்க் குற்றங்கள்’ அனைத்தையும் நிறுத்துவதற்கு சர்வதேச சமூகம் (international community) வலியுறுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன். நாங்கள் இப்போது உலக மக்களுக்கு அழைப்பு விடுக்கிறோம். உங்களுடைய மனசாட்சி விழித்திருக்கிறது என்றால், தயவுசெய்து இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கவும். மருத்துவமனைகள் மீது நிகழ்த்தப்படும் இத்தகைய போர்க் குற்றங்களைத் தடுத்து நிறுத்த முன்வராத உலகின் எந்தவொரு அரசியல்வாதியும், தன்னுடைய கரங்களில் ரத்தக்கறை படிந்திருப்பதை மறந்துவிடக் கூடாது.

தற்போது காசா நகரில் உள்ல அல்-ஷிஃபா மருத்துவமனை முற்றுகையிடப்பட்டுள்ளது. மருத்துவமனையில் போதிய பணியாளர்கள் இல்லை. தண்ணீரும், மின்சார வசதியும் கிடையாது. மருத்துவமனைகளின் கதவுகள் திறந்தே உள்ளன. ஆனால், எங்களால் நோயாளிகளுக்கு மருத்துவ உதவிகளை வழங்க முடியவில்லை. தற்போது போர் நிறுத்தப்பட வேண்டும். இவ்வாறான போர்க் குற்றங்களை நாம் தொடர முடியாது” என்றார் வேதனையுடன்.

இஸ்ரேல் ராணுவம் லெபனான் எல்லைக்குள் ஆளில்லா விமானம் மூலம் தாக்குதல் நடத்தியதாக அந்நாட்டின் அதிகாரபூர்வ ஊடகம் தெரிவித்துள்ளது. காசா அல்-ஷிஃபா மருத்துவமனையில் உள்ள புதைக்குழியில் 100 உடல்களை அடக்கம் செய்திருப்பதாக பாலஸ்தீன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். “மருத்துவமனையைச் சுற்றி இஸ்ரேல் தொடர்ந்து மூன்று நாட்களாகக் குண்டுவீசி வருகிறது. இதனால், மருத்துவமனைக்குள் ஆம்புலன்ஸ்கள் நுழைவதற்கும், வெளியேறுவதற்கும் தடையாக உள்ளது. நாங்கள் அல்-ஷிஃபா வளாகத்துக்குள் சிக்கியுள்ளோம்” என்று பாலஸ்தீன சுகாதார அமைச்சகத்தின் இயக்குநர் ஜெனரல் தெரிவித்துள்ளார்.

காசாவின் மிகப் பெரிய மருத்துவ வளாகமான அல்-ஷிஃபா மருத்துவமனையில் எரிபொருள் தீர்ந்துவிட்டதால் அனைத்து செயல்பாடுகளையும் நிறுத்தி வைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது என்று சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது குறித்து சுகாதார அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் அஷ்ரஃப் அல் கித்ரா, “இன்குபேட்டருக்குள் புதிதாகப் பிறந்த குழந்தை ஒன்று இறந்துவிட்டது. அங்கு 45 குழந்தைகள் உள்ளன” என்று கண்கலங்கிபடி தெரிவித்துள்ளார். இஸ்ரேலிய ராணுவம் அல்-ஷிஃபா மருத்துவமனை மீது வெள்ளை பாஸ்பரஸைப் பயன்படுத்தி தாக்குதல் நடத்தி வருவதாக பாலஸ்தீன சுகாதார அமைச்சர் குற்றம்சாட்டியுள்ளார். கடந்த இரண்டு நாட்களில் காசாவில் உள்ள 1,00,000 பாலஸ்தீனிய மக்கள் தெற்கு பகுதியை நோக்கி நகர்ந்துள்ளதாக இஸ்ரேல் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் ஒரு செய்தியாளர் சந்திப்பில், “காசாவில் குழந்தைகள், பெண்களைக் கொல்வதை இஸ்ரேல் நிறுத்தவேண்டும். பொதுமக்கள் மீது குண்டு வீசுவதற்கு எந்த நியாயமும் இல்லை. குழந்தைகள், பெண்கள், வயதானவர்கள் கொல்லப்படுகிறார்கள். இந்த மரணங்கள் அதிருப்தியை ஏற்படுத்துகின்றன” எனத் தெரிவித்தார். அதோடு, இஸ்ரேல் சர்வதேச சட்டத்தை மீறியதா என்பதற்குப் பதிலளிக்கப் பிரெஞ்சு அதிபர் மறுப்பு தெரிவித்துள்ளார். அதற்கு அவர், “நான் நீதிபதி இல்லை. ஒரு நாட்டுடைய தலைவர்” என்றார்.

இதன் தொடர்ச்சியாக, “இஸ்ரேல் – காசா மோதல் தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது. இன்று, இஸ்லாமிய நாடுகளின் ஒற்றுமை மிகவும் முக்கியமானது” என்று என ஈரான் அதிபர் தெரிவித்துள்ளார்.

அக்டோபர் 7 முதல் காசா மீதான இஸ்ரேலிய தாக்குதல்களில் இதுவரை 11,078 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இஸ்ரேலில் ஹமாஸ் தீவிரவாதிகள் நடத்திய திடீர் தாக்குதலில் சுமார் 1,400 இஸ்ரேலியர்கள் உயிரிழந்ததாக கூறப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Thanks

Check Also

1162233

பாலஸ்தீன பிரச்சினைக்கு நீடித்த தீர்வு காண இஸ்ரேலுக்கு பிரதமர் மோடி அழைப்பு | PM meets Israel President, calls for durable resolution of Palestine issue

துபாய்: பாலஸ்தீன பிரச்சினைக்கு நீடித்த தீர்வு காண இஸ்ரேல் முன்வர வேண்டும் என்று அந்நாட்டு அதிபர் ஐசக் ஹெர்சாக்கிடம் பிரதமர் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *