Tuesday , November 28 2023
1152662

மதுரையில் தீபாவளி நாளில் குவிந்த 1,000 மெட்ரிக் டன் குப்பை – தூய்மைப் பணியில் 3,830 பேர் தீவிரம் | 1,000 metric tonnes of Diwali garbage in Madurai

மதுரை: மதுரை மாநகராட்சியில் தீபாவளி முடிந்த மறுநாளான இன்று ஒரே நாளில் 1,000 மெட்ரிக் டன் குப்பைகள் உருவானது. இந்தக் குப்பைகளை அகற்றும் பணியில் 3,830 தூய்மைப் பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர்.

மதுரை மாநகராட்சியில் 5 மண்டலங்கள், 100 வார்டுகள் உள்ளன. 20 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கிறார்கள். சுற்றுலா, ஆன்மிகம், மருத்துவம் மற்றும் வர்த்தக முக்கியத்துவம் வாய்ந்த நகராக மதுரை திகழ்வதால் தினமும் பல ஆயிரம் பேர் நகர்பகுதியில் வந்து செல்கிறார்கள். அதனால், ஒரு நாளைக்கு மதுரை மாநகராட்சிப் பகுதியில் 750 முதல் 800 டன் வரை குப்பைகள் சேகரமாகிறது. இந்தக் குப்பைகளை தூய்மைப் பணியாளர்கள் சேகரித்து, வாகனங்கள் மூலம் மதுரைக்கு அருகே உள்ள வெள்ளக்கல் உரக்கிடங்குக்கு கொண்டு போட்டு இயற்கை உரம் தயாரிக்கின்றனர்.

இந்நிலையில், நேற்று தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டது. இந்த பண்டிகையை முன்னிட்டு, நகர்பகுதிகளில் பட்டாசுகள் வெடிக்கப்பட்டன. காலை முதல் நள்ளிரவு வரை தொடர்ந்து பட்டாசு வெடிக்கப்பட்டதால் வழக்கமான குப்பைகளும், தீபாவளி பட்டாசு குப்பைகளும் உணவு கழிவுகளும் ஏராளம் சேர்ந்து கொண்டன. இந்தக் குப்பைகளை தரம் பிரித்து ஒரே நாளில் சேகரித்து உரக்கிடங்குக்கு கொண்டு செல்வது மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களுக்கு சவாலானது. அதனால், இன்று குப்பைகளை அப்புறப்படுத்த கூடுதல் தூய்மைப் பணியாளர்கள் நியமிக்கப்பட்டனர்.

அதிகாலை முதலே முக்கிய சாலைகள், குடியிருப்பு சாலைகள், வணிக வீதிகள், மால்கள் மற்றும் கோவில்கள் பகுதியில் உள்ள குவிந்த குப்பைகளை அப்புறப்படுத்தும் பணிகளை தூய்மைப் பணியாளர்கள் மேற்கொண்டனர். சுகாதாரத் துறை நகர் நல அலுவலர் வினோத் தலைமையில் மண்டல சுகாதாரத் துறை ஆய்வாளர்கள், மேற்பார்வையாளர்கள், குப்பைகளை வாகனங்களை கொண்டு முழுவீச்சில் அப்புறப்படுத்தினர். ஆனால், குப்பைகளை முழுமையாக அகற்ற முடியாமல் தூய்மைப் பணியாளர்கள் திணறினர். பெரும்பாலான மாநகராட்சி வாகனங்கள் பழுதடைந்து பழுதுப்பார்க்காமல் உள்ளதால் குப்பைகளை சேகரித்து அவற்றை வெள்ளக்கல் உரக்கிடங்கிற்கு கொண்டு செல்வதில் சிரமம் அடைந்தனர்.

மாநகராட்சி சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறுகையில், ”தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வணிக இடங்களான மாசி வீதிகள், விளக்குத்தூண், காமராஜர் சாலை போன்ற இடங்களில் கடந்த ஒரு வாரமாகவே குப்பைகள் தேங்காத வகையில் குப்பைகள் சேகரிக்கப்பட்டன. இன்று தீபாவளி முடிந்த நிலையில் குப்பைகள் பெருமளவில் உருவானது. இன்று 13-ம் தேதி பொது விடுமுறையாக இருந்தாலும் பொது சுகாதாரத்தின் அவசியம் கருதி, மதுரை மாநகராட்சியில் 3,830 தூய்மைப் பணியாளர்கள் குப்பைகள் சேகரிக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். மேலும், குப்பைகளை சேகரித்து உடனுக்குடன் 9 காம்பாக்டர் லாரிகள், 42 டம்பர் பிளேசர் லாரிகள், 4 டிப்பர் லாரிகள், 33டிராக்டர்கள் மற்றும் 155 இலகுரக குப்பைகள் சேகரிக்கும் வாகனங்கள் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றன. தீபாவளி பண்டிகை தினத்தை முன்னிட்டு நேற்று ஒரே நாளில் 1000 மெட்ரிக் டன் குப்பைகள் உருவானது” என்றனர்.

Thanks

Check Also

1160122

46-வது பிறந்தநாள் கொண்டாட்டம்: அமைச்சர் உதயநிதிக்கு திமுக நிர்வாகிகள் வாழ்த்து | 46th birthday celebration

சென்னை: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை ஒட்டி அவருக்கு கமல்ஹாசன், திருமாவளவன் உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்களும் திமுக …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *