மதுரை: மதுரையில் கடந்த வாரம் ரூ.200-க்கு விற்ற தக்காளி நேற்று முதல் ரூ.50 ஆக சரிந்தது. ஆனால், தக்காளி வரத்து வெகுவாக அதிகரித்த நிலையிலும் வியாபாரிகள் விலையை கூட்டி விற்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
தமிழகத்தில் மாறுபட்ட கால நிலையால் தக்காளி உற்பத்தி குறைந்து கடும் தட்டுப்பாடு ஏற்பட்டது. இச்சூழலில் ஆந்திரா, கர்நாடகாவில் இருந்து தமிழகத்துக்கு தக்காளி விற்பனைக்கு கொண்டு வரப்படும். ஆனால், இந்த முறை ஆந்திரா, கர்நாடகாவிலும் கனமழையால் தக்காளி விளைச்சல் குறைந்தது.
அதனால், தக்காளி விலை தமிழகத்தில் வரலாறு காணாத உச்சத்தை தொட்டு கிலோ ரூ.200-க்கு விற்றது. இந்நிலையில் கடந்த ஒரு வாரமாக தக்காளி வரத்து கொஞ்சம், கொஞ்சமாக அதிகரிக்கத் தொடங்கினாலும் தமிழக தக்காளியை கர்நாடகா, ஆந்திரா வியாபாரிகளும் கொள்முதல் செய்ததால் விலை குறையவில்லை.
இந்த சூழலில் நேற்று முதல் தக்காளி விலை திடீரென குறையத் தொடங்கியது. மாட்டுத் தாவணி ஒருங்கிணைந்த காய்கறி மார்க்கெட்டில் கிலோ ரூ.50 முதல் ரூ.80 வரை விற்பனையானது. இருப்பினும் வியாபாரிகள் விலையை குறைக் காமல் கூட்டியே விற்பதாக குற்றச் சாட்டு எழுந்துள்ளது.