குவாஹாட்டி: மணிப்பூரில் துப்பாக்கிகள் கொள்ளை அடித்தது, ராணுவ வீரர்களின் சீருடைகளை அணிந்தது தொடர்பாக 5 பேர் மீது சட்டவிரோத செயல்பாடுகள் தடுப்புச் சட்டத்தின் (யுஏபிஏ) கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
மணிப்பூரில் மைதேயி சமூகத்தினருக்கும் குகி சமூகத்தினருக்கும் இடையே கடந்த மே 3-ம் தேதி முதல் மோதல் நடைபெற்று வருகிறது. இதுவரை நடந்த கலவர சம்பவங்களில் 175 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில் கடந்த மே, ஜூன் மாதங்களில் நடந்த வன்முறையின்போது துப்பாக்கிகளை கொள்ளையடித்த வழக்கில் 5 பேரை போலீஸார் கைது செய்தனர். மேலும் இவர்கள் ராணுவ வீரர்கள் போன்று உடையணிந்து அந்தப் பகுதியில் வன்முறையில் ஈடுபட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது.
இந்நிலையில் இந்த 5 பேர் மீதும் சட்டவிரோத செயல்பாடுகள் தடுப்புச் சட்டத்தின் (யுஏபிஏ) கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் ஒருவர் தடை செய்யப்பட்ட மணிப்பூர் மக்கள் சுதந்திர ராணுவ(பிஎல்ஏ) அமைப்பைச் சேர்ந்தவர். இவர் மீது தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் ஏற்கெனவே வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
மே 3-ம் தேதி தொடங்கிய கலவரத்தில் இதுவரை 175 பேர் இறந்துள்ளதாக மணிப்பூர் போலீஸார் அறிவித்துள்ளனர். 1,118 பேர் காயமடைந்துள்ளனர். 33 பேர் மாயமாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.