புதுடெல்லி: மக்களவை மற்றும் மாநில சட்டப்பேரவைகளில் மகளிருக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் மசோதா மக்களவையில் நேற்று முன்தினம் நிறைவேற்றப்பட்ட நிலையில், மாநிலங்களவையில் நேற்று தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது.
மக்களவை மற்றும் மாநில சட்டப்பேரவைகளில் மகளிருக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று நீண்ட காலமாக கோரிக்கை வைக்கப்பட்டு வந்தது. கடந்த 1996-ம் ஆண்டு அப்போதையை பிரதமர் தேவகவுடா தலைமையிலான ஆட்சியின்போது மகளிர் இடஒதுக்கீடு மசோதா நாடாளுமன்றத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. போதிய ஆதரவு கிடைக்காத நிலையில், இந்த மசோதா 1998-ல் வாஜ்பாய் ஆட்சிக் காலத்தில் மீண்டும் அறிமுகம் செய்யப்பட்டது. அப்போதும் போதிய ஆதரவு கிடைக்கவில்லை.