புதுடெல்லி: மகளிர் இடஒதுக்கீடு மசோதா, நமது காலத்தின் மிக முக்கிய புரட்சி என்று குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு பாராட்டு தெரிவித்துள்ளார். மனித உரிமைகள் தொடர்பான ஆசிய பசிபிக் அமைப்பின் வருடாந்திர பொதுக் கூட்டத்தை தொடங்கி வைத்துப் பேசிய குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு இதனைத் தெரிவித்தார்.
இவ்விழாவில் அவர் பேசியது: “மனித உரிமைகள் அம்சத்தை தனியாகக் கருதாமல், மனிதர்களின் அறியாமையால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள இயற்கை அன்னையின் மீது அனைவரும் உரிய கவனம் செலுத்த வேண்டும். இந்தியாவில், பிரபஞ்சத்தின் அனைத்து உயிரினங்களும் தெய்வீகத்தின் வெளிப்பாடு என்று நாம் நம்புகிறோம். காலம் கடப்பதற்குள் இயற்கையை பாதுகாத்து வளப்படுத்த அதன் மீதான நமது அக்கறையை நாம் புதுப்பிக்க வேண்டும்.
இயற்கை அழிவுக்குக் காரணமாக மனிதர்கள் இருப்பது போன்று, ஆக்கத்திற்கும் மனிதர்கள்தான் காரணம். விஞ்ஞான ஆய்வுகளின்படி, இந்த பூமி ஆறாவது அழிவின் கட்டத்தை எட்டியுள்ளது. மனிதனால் உருவாக்கப்படும் அழிவு நிறுத்தப்படாவிட்டால், மனித இனத்தை மட்டுமல்ல, பூமியில் உள்ள மற்ற உயிர்களும் அழிந்துவிடும்.
குடியரசின் தொடக்கத்திலிருந்து, நமது அரசியலமைப்பு உலக அளவில் உள்ள வயது வந்தோருக்கு அளிக்கப்படும் வாக்குரிமையை ஏற்றுக்கொண்டது. மேலும், பாலின நீதி மற்றும் வாழ்க்கை மற்றும் கண்ணியத்தைப் பாதுகாப்பதில் பல அமைதியான புரட்சிகளை ஏற்படுத்த நமது ஜனநாயகம் நமக்கு உதவி இருக்கிறது.
உள்ளாட்சித் தேர்தல்களில் பெண்களுக்கு குறைந்தபட்சம் 33 சதவீத இடஒதுக்கீட்டை உறுதி செய்தோம். மாநில சட்டமன்றங்கள் மற்றும் நாடாளுமன்றத்தில் பெண்களுக்கு இதேபோன்ற இடஒதுக்கீட்டை வழங்கும் திட்டம் இப்போது வடிவம் பெற்று வருகிறது. பாலின நீதிக்கான நமது காலத்தின் மிக முக்கிய புரட்சியாக இது இருக்கும். மனித உரிமைகளை மேம்படுத்துவதற்காக உலகின் பிற பகுதிகளில் உள்ள சிறந்த நடைமுறைகளிலிருந்து கற்றுக்கொள்ள இந்தியா தயாராக உள்ளது.
உலகெங்கிலும் உள்ள மனித உரிமை நிறுவனங்கள் மற்றும் பங்குதாரர்களுடன் கலந்துரையாடல் மற்றும் ஆலோசனை மூலம் சர்வதேச ஒருமித்த கருத்தை உருவாக்குவதில் ஆசிய பசிபிக் பிராந்திய அமைப்பு பெரும் பங்கு வகிக்கிறது” என்று குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு தெரிவித்தார்.