கோவில்பட்டி: கோவில்பட்டியில் புறவழிச்சாலையில் 3.64 ஏக்கரில் கூடுதல் பேருந்து நிலையம் செயல்படுகிறது. இந்த கூடுதல் பேருந்து நிலையத்துக்கு மக்கள் ஆதரவு இல்லாததால், பேருந்துகள் நகருக்குள் உள்ள அண்ணா பேருந்து நிலையத்தில் இருந்தே இயக்கப்படுகின்றன. மதுரை, திருநெல்வேலி மார்க்கங்களில் இயங்கும் அரசு பைபாஸ் ரைடர் பேருந்துகள், அரசு விரைவு பேருந்துகள், ஆம்னி பேருந்துகள் மட்டும் கூடுதல் பேருந்து நிலையத்தின் எதிரே உள்ள அணுகு சாலையில் நின்று செல்கின்றன.
பழைய பேருந்து நிலையம் மற்றும் புதிய கூடுதல் பேருந்து நிலையம் இடையே செப்டம்பர் 18-ம் தேதிக்குள் சுற்றுப்பேருந்துகள் இயக்கப்படும் என, அதிகாரிகள் தெரிவித்திருந்தனர். ஆனால், அதன்படி இயக்கப்படவில்லை. இரவு 8 மணி முதல் அதிகாலை 6 மணி வரை அனைத்து பேருந்துகளும் பழைய பேருந்து நிலையம் வந்து செல்ல வேண்டும் என்று, முன்னர் எடுக்கப்பட்ட முடிவுகளும் காற்றில் பறந்துவிட்டன.
இதுகுறித்து சமூக ஆர்வலர் அ.ஜெயப்பிரகாஷ் நாராயணசாமி கூறும்போது, “கோவில்பட்டி புதிய கூடுதல் பேருந்து நிலையத்தில் புறக்காவல் நிலையம் கிடையாது. இரவு நேரங்களில் பயணிகளுக்கு பாதுகாப்பு அறவே இல்லை. கூடுதல் பேருந்து நிலையத்தில் இருந்து ஊருக்குள் நகர பேருந்துகளும் இயக்கப்படவில்லை.
இரவு 8 மணி முதல் அதிகாலை 6 மணி வரை அரசு விரைவு பேருந்துகள் தவிர, மற்ற அனைத்து பேருந்துகளும் கோவில்பட்டி ஊருக்குள் உள்ள பழைய பேருந்து நிலையத்துக்கு வந்து செல்ல வேண்டும் என, முன்னர் அதிகாரிகள் உத்தரவிட்டிருந்தனர். இதுதொடர்பாக உயர்நீதி மன்றமும் உத்தரவிட்டது. அதன் பின்னர் ஊருக்குள் பேருந்துகள் திருப்பிவிடப்பட்டன. இது ஒரு மாத காலம் மட்டுமே நீடித்தது. அதன் பின்னர் எந்தவொரு பேருந்துகளும் இரவில் ஊருக்குள் வருவது கிடையாது. இதுகுறித்து போராட்டங்கள் நடத்தி ஓய்ந்துவிட்டோம்” என்றார்.
தமாகா நகரத் தலைவர் கே.பி.ராஜகோபால் கூறும்போது, “வட்டாட்சியர் தலைமையில் நடந்த கூட்டத்தில், செப்டம்பர் 18-ம் தேதிக்குள் சுற்றுப்பேருந்து இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது. ஆனால் செயல்படுத்தவில்லை. இதனைக் கண்டித்து விரைவில் மணி அடிக்கும் போராட்டம் நடத்த உள்ளோம்” என்றார்.