சென்னை: அரசு போக்குவரத்துக் கழக தொழிலாளர்களின் தீபாவளி போனஸில் தொழிற்சங்கங்களுக்கான தொகையை பிடித்தம் செய்ய தடை விதிக்கக் கோரி தொடரப்பட்ட வழக்கில் தமிழக அரசும், போக்குவரத்து கழகங்களும் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக கோவையை சேர்ந்த நேதாஜி போக்குவரத்து தொழிலாளர்கள் பாதுகாப்பு தொழிற்சங்கத்தின் பொதுச் செயலாளர் அன்புராஜ், சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில், ‘அரசு போக்குவரத்து கழகங்களில் உள்ள அரசியல் கட்சிகளின் தொழிற்சங்க உறுப்பினர்கள் ஒப்புதலுடன், மாதாந்திரஊதியத்தில் இருந்து சங்கத்தின்சந்தா தொகை பிடித்தம் செய்யப்பட்டு, தொழிற்சங்கங்களுக்கு வழங்கப்படும் நடைமுறை அமலில் உள்ளது.
ஆனால், தீபாவளி பண்டிகையையொட்டி தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் வருடாந்திர போனஸ் தொகையிலும் தொழிற்சங்கங்களுக்கான பணம் பிடித்தம் செய்யப்படுகிறது. தொழிலாளர்களின் ஒப்புதல் பெறாமல் இதுபோல போனஸ் தொகையில் பிடித்தம் செய்ய தடை விதிக்க வேண்டும்’ என கோரியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி ஆர்.ஹேமலதா முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் ஆர்.ஒய்.ஜார்ஜ் வில்லியம்ஸ் ஆஜராகி, ‘‘தீபாவளி போனஸ் தொகையில் தொழிற்சங்கங்களுக்கு பணம் பிடித்தம் செய்யப்படுவதால் தொழிலாளர்கள் பண்டிகையை நிம்மதியாக கொண்டாட முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். தொழிலாளர்களின் ஒப்புதல் பெறாமலேயே இவ்வாறு போனஸில் பிடித்தம் செய்யப்படுவது சட்ட விரோதம். எனவே, தீபாவளிபோனஸ் தொகையில் தொழிற்சங்கங்களுக்கு பணம் பிடித்தம் செய்ய தடை விதிக்க வேண்டும்’’ என வாதிட்டார்.
அதையடுத்து நீதிபதி, இதுதொடர்பாக தமிழக அரசும், அரசு போக்குவரத்து கழகங்களும் இருவாரங்களில் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை தள்ளி வைத்துள்ளார்.