பொள்ளாச்சி: பொள்ளாச்சியை அடுத்த ஏ.நாகூர் ஊராட்சியில் கான்கிரீட் பெயர்ந்து தொகுப்பு வீடுகள் சேதமடைந்துள்ள நிலையில், அதனை சீரமைத்து தர வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொள்ளாச்சி வடக்கு ஒன்றியத்துக்குட்பட்டது ஏ.நாகூர் ஊராட்சி. இங்குள்ள தொகுப்பு வீடுகள் அனைத்தும் 30 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டவை. வீடுகள் அனைத்தும் பழுதடைந்த நிலையில், மேற்கூரையில் சிமெண்ட் பூச்சுகள் பெயர்ந்து விழுகின்றன. இதனால், அந்த வீட்டில் குடியிருக்க அச்சப்படுகின்றனர்.
இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது: எங்கள் பகுதியில் தொகுப்பு வீடுகள் கட்டப்பட்டு பல ஆண்டுகளாகிவிட்டதால், அனைத்து வீடுகளிலும் சுவர்கள் இடிந்து விழுந்து, மேற்கூரைகள் பெயர்ந்து அவ்வப்போது கீழே விழுகின்றன. இதனால் இரவு நேரத்தில் உள்ளே தூங்குவதற்கு அச்சத்துடன் இருக்க வேண்டிய நிலை உள்ளது. இங்கு வசிப்பவர்கள் அனைவருமே கூலி வேலை செய்பவர்கள் என்பதால், அந்த வீடுகளை சரிசெய்ய முடிவதில்லை. தற்போது மழை பெய்து வருவதாலும், பலத்த காற்று வீசி வருவதாலும் அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நடைபெறுவதற்கு முன்பாக, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து, பழுதடைந்த வீடுகளை சரிசெய்து தர வேண்டும்.
கடந்த ஆண்டு, இதே பகுதியில் வீடு ஒன்று மழைக்கு தாக்குப்பிடிக்காமல் மேற்கூரையுடன் அப்படியே விழுந்து தரைமட்டமானது. அந்த வீட்டில் தங்கியிருந்தவர்கள், அருகில் இருந்த ஆட்டு கொட்டகையில் இருந்ததால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். தற்போதும், அவ்வப்போது வீட்டின் மேற்கூரை சிமெண்ட் பெயர்ந்து கீழே விழுகிறது. ஒருசில வீடுகளில் சுவரில் மரம் வைத்து தாங்கி பிடிக்க ஏதுவாக அமைத்துள்ளனர். இதை வருவாய் துறை அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு சென்றுள்ளனர். தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில், பெரும் அசம்பாவிதம் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடனடியாக அந்த வீடுகளை புதுப்பித்து தர வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.