விருத்தாசலம்: திட்டக்குடி அருகே அர்ச்சகராக தேர்வு செய்யப்பட்ட இரு பெண்கள் மற்றும் ஒரு ஆண் ஆகியோர் அமைச்சர் சி.வெ.கணேசனை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
தமிழகத்துல் அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற திட்டத்தை முன்னாள் முதல்வர் கருணாநிதி கொண்டு வந்தார். இந்து சமய அறநிலையத் துறை சார்பில் அர்ச்சகர் பயிற்சி பெற திருவண்ணாமலை, பழனி, திருச்செந்தூர், மதுரை, ஸ்ரீரங்கம், சென்னை ஆகிய நகரங்களில் பயிற்சி பள்ளிகள் உள்ளன. இங்கு சேரும் நபர்களுக்கு ஓராண்டு பயிற்சி அளிக்கப்படுகிறது.
இந்த பயிற்சியில் ஆகமங்கள், பூஜைகள் சம்பந்தமாக பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்த பயிற்சி பள்ளியில் இதுவரை ஆண்கள் மட்டுமே பயிற்சி பெற்று வந்தனர்.இந்நிலையில் தமிழகத்தில் மொத்தம் உள்ள 94 பேரில் மூன்று பெண்கள் முதல் முறையாக அர்ச்சகர் பயிற்சி முடித்து சான்றிதழ் பெற்றுள்ளனர்.
இதில் கடலூர் மாவட்டம் திட்டக்குடியை அடுத்த மேல் ஆதனூர் கிராமத்தைச் சேர்ந்த ரம்யா, கிருஷ்ணவேணி ஆகியோர் இப்பயிற்சி முடித்துள்ளனர். மேலும் குமார வேல் என்பவரும் அர்ச்சகர் பயிற்சி முடித்து சான்றிதழ் பெற்றுள்ளார். இந்நிலையில் திட்டக்குடியை சேர்ந்த 2 பெண்கள் உள்பட மூவரும் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் சி.வெ.கணேசனை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.