புதுச்சேரி: புதுச்சேரியில் இருநாட்களாக பெய்து வரும் தொடர் மழைப் பொழிவால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. தாழ்வான இடங்களில் குடியிருப்பு பகுதியில் தேங்கிய நீரை மோட்டார் மூலம் அகற்ற முதல்வர் ரங்கசாமி உத்தரவிட்டுள்ளார்.
புதுச்சேரியில் நேற்று முன்தினம் காலை முதலே வானம் மப்பும் மந்தாரமுமாக இருந்து வந்தது. நேற்று முன்தினம் மாலை சுமார் 6.30 மணி அளவில் லேசான மழை பெய்தது. அதன்பின் இரவு 11 மணிக்கு தொடங்கிய மழை விடிய விடிய தொடர்ந்து பெய்தது. இதனால், தாழ்வான இடங்களில் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடியது.
மழையால் வழக்கமாக பாதிக்கப்படும் ரெயின்போ நகர், கிருஷ்ணா நகர், பாவாணன் நகர், நடேசன் நகர், வெங்கட்டா நகர், பூமியான்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் சாலைகளில் மழை நீர் தேங்கியது. ஒரு சில வீடுகளுக்குள் மழை நீர் புகுந்தது. தொடர்ந்து நேற்றும் அதிகாலை முதலே மழை பெய்த வண்ணம் இருந்தது. மாலையில் சற்றே விட்ட மழை இரவு மீண்டும் தொடர்ந்தது.
நகராட்சி சார்பாக பல்வேறு இடங்களில் மின் மோட்டார்கள் வைத்து நீரை வெளியேற்றிய போதும், தொடர் மழை காரணமாக தாழ்வான பகுதிகளில் மழை நீர் சூழ்ந்ததால் அப்பகுதி மக்கள் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர்.தாழ்வான பகுதிகளான ரெயின்போநகர், சூர்யா நகர் பகுதிகளில் முட்டியளவு தண்ணீர் தேங்கி நிற் பதால், அப்பகுதி மக்கள் வெளியே செல்லமுடியாத சூழல் உள்ளது.
புதுச்சேரி கடலோரப் பகுதிகளில் சூறைக் காற்று மணிக்கு 55 கி.மீ வேகத்தில் வீசக்கூடும் என எச்சரிக்கை விடப்பட்டதால்,மீனவர்கள் கடலுக்குள் செல்ல வில்லை. புதுச்சேரி தேங்காய் திட்டு துறைமுக பகுதி மற்றும் வீராம்பட்டினம், பூரணங்குப்பம் நல்லவாடு, வைத்திகுப்பம் உள்ளிட்ட மீனவ கிராமங்களில் படகுகள் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டன.
முதல்வர், அமைச்சர் ஆய்வு: முதல்வர் ரங்கசாமி, அமைச்சர் லட்சுமி நாராயணன் ஆகியோர் மழையால் பாதிக்கப்பட்ட கிழக்கு கடற்கரை சாலை, மடுவுபேட், சாமி பிள்ளைத் தோட்டம், ரெயின்போ நகர், பவழ நகர், வாழைக்குளம் ஆகிய பகுதிகளில் ஆய்வு செய்தனர். மழை நீர் தேங்கியுள்ள பகுதிகளில் மோட்டார் மூலம், நீரை உடனே வெளியேற்ற அதிகாரிகளுக்கு முதல்வர் ரங்கசாமி உத்தரவிட்டார்.
மழை தொடர்ந்து பெய்து வருவதால் தேங்கியுள்ள மழை நீரை அகற்ற முடியவில்லை. புதுவை மற்றும் உழவர் கரை நகராட்சி அதிகாரிகள் கொண்ட குழு அனைத்து பகுதிகளுக்கும் நேரில் சென்று ஆய்வு செய்து வருகிறது. தேவை யான இடங்களில் மோட்டார்களை பொருத்தி தண்ணீரை வெளியேற்ற நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
தொடர் மழையால் நேற்று முன்தினம் இரவு புதுச்சேரி நகரின் பல இடங்களில் பல மணி நேரம் மின்தடை ஏற்பட்டு, பின்னர் சீரானது. மின் விநியோகத்தில் பெரியளவில் பாதிப்பு இல்லை. இருப்பினும் எல்லைபிள்ளைச் சாவடியில் பெரிய மரம் உயர் அழுத்த மின் கேபிள் மீது விழுந்து மின் கேபிள் அறுந்தது. இதனால் பெரியார் நகர், பவழநகர், செல்லம் நகர் பகுதிகளில் மின்தடை ஏற்பட்டது. மின்துறை ஊழியர்கள் 10-க்கும் மேற்பட்டோர் விடாத மழையிலும் உயர் அழுத்த மின் கேபிளை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர்.
தேங்கிய நீரில் சிக்கிய கார்: புதுவை – விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலை அரியூர் பேருந்து நிலையத்தில் மழைநீர் குளம் போல் தேங்கியது. இந்தப் பகுதியில் மேம்பாலம் பணி நடைபெறுவதால் மழைநீரை வடிய வைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் மழை நீரை கடந்து வாகனங்களை ஒட்டி செல்கின்றனர்.
நேற்று பிற்பகல் இந்த வெள்ளத்தில் கார் ஒன்று சிக்கிக்கொண்டது. அப்பகுதி இளைஞர்கள் நீரில் இறங்கி, காரை தள்ளி அங்கிருந்து அப்புறப் படுத்தினர். பின்னர், ‘இப்பகுதி ஆபத்தானது’ என எச்சரிக்கையாக சிவப்பு நிறபிளாஸ்டிக் பொருளை கட்டி வைத்தனர். காகிதத்தில் கப்பல் விட்டு தங்கள் எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில், அப்பகுதி இளைஞர்கள் வீடியோ எடுத்து வெளியிட்டனர்.
இருநாள் மழையில் 17 ஏரிகள் நிரம்பின: கடந்த இருநாள் மழையில் புதுச்சேரியில் உள்ள 84 ஏரிகளில் 17 ஏரிகள் நிரம்பி விட்டன. 5 ஏரிகள் 75 சதவீதத்துக்கும் மேல் நிரம்பி விட்டன. புதுச்சேரி முழுக்க 10 இடங்களில் மரங்கள் விழுந்துள்ளன. பூமியான்பேட்டையில் மரம் விழுந்து ட்ரான்ஸ் பார்மர் சரிந்துள்ளது. அப்பகுதியில் அதை சரி செயும் பணியில் மின் துறையினர் ஈடுபட்டனர். புதுச்சேரியில் நேற்று காலை 8.30 மணி முதல் மாலை 5.30 வரை 3.62 செ.மீ மழை பதிவானது.