சென்னை: சென்னையில் மழைக்கால நோய்களுக்கான மருத்துவ முகாமை பார்வையிட்ட சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், புதுக்கோட்டை மாவட்டத்தில் கட்டப்பட்டுள்ள அரசு பல் மருத்துவ கல்லூரியை வரும் 15-ம் தேதிமுதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலிக் காட்சி மூலம் திறந்து வைக்கவுள்ளதாக தெரிவித்தார்.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி பெய்து வருகிறது.இதனால், டெங்கு, டைபாய்டு, மலேரியா உள்ளிட்ட காய்ச்சல்களால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டு அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுகின்றனர். குறிப்பாக, டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகமாகவே காணப்படுகிறது. இன்னும் 3 மாதங்களுக்கு இந்த பாதிப்பு அதிகரிக்கவும் வாய்ப்புள்ளது. அதனால், டெங்கு உள்ளிட்ட நோய்களுக்காக தமிழகம் முழுவதும் வாரம்தோறும் சனிக்கிழமைகளில் 1,000 இடங்களில் மழைக்கால மருத்துவ முகாம்களை வரும் டிசம்பர் மாதம் வரை 10 வாரங்களுக்கு நடத்த சுகாதாரத் துறை முடிவு செய்தது. அதன்படி, இரண்டு வார மருத்துவ முகாம்கள் நிறைவடைந்துள்ளன.
மூன்றாவது வாரமாக நேற்று தமிழகம் முழுவதும் 1,000 இடங்களில் மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றன. சென்னையில் ஷெனாய் நகர், புல்லாஅவென்யூவில் நடந்த மருத்துவமுகாமை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பார்வையிட்டார். மாநகராட்சி ஆணையர் ஜெ. ராதாகிருஷ்ணன், பொதுசுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்துத்துறை இயக்குநர் தி.சி.செல்வவிநாயகம், மாநகர நல அலுவலர் எம்.ஜெகதீசன், எம்எல்ஏ எம்.கே.மோகன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
பின்னர்செய்தியாளர்களிடம் அமைச்சர் கூறியதாவது: ஒவ்வொரு வடகிழக்கு பருவமழையின் போதும் மழைக்கால நோய்களில் இருந்து பொதுமக்களை காக்கும் பொருட்டு வரும் டிசம்பர் மாதம் வரை வாரந்தோறும் மருத்துவ முகாம்கள் நடத்தப்படுகின்றன.
3-வது பல் மருத்துவ கல்லூரி: டெல்லியில் செயல்பட்டு வரும் ஆம் ஆத்மி மொகுலா கிளினிக்கை போன்று தமிழகத்தில் 708 இடங்களில் நகரப்புற நலவாழ்வு மையங்கள் திறக்கப்படும் என அறிவித்த முதல்வர் கடந்த ஜூன் 6-ம் தேதி500 இடங்களில் தொடங்கி வைத்தார். அனைத்தும் சிறப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. சென்னையில் மட்டும் வார்டுக்கு ஒன்றுவீதம் 200 இடங்களில் திறக்க திட்டமிடப்பட்டு, 140 நகர்புற நலவாழ்வு மையங்கள் திறக்கப்பட்டுள்ளன. தமிழ்நாடு முழுவதும் 152 நகர்புற நலவாழ்வு மையம் கட்டும் பணிகள் முடிவுறும் நிலையில் உள்ளது. விரைவில் முதல்வர் திறந்து வைக்கவுள்ளார்.
இதேபோல் புதுக்கோட்டை மாவட்டத்தில் தமிழகத்தின் மூன்றாவது அரசு பல் மருத்துவக் கல்லூரியை முதல்வர் ஸ்டாலின் வரும் 15-ம் தேதி காணொலிக் காட்சி மூலம்திறந்து வைக்கவுள்ளார். தொடர்ந்துபுதுக்கோட்டை மாவட்டத்தில் 17 இடங்களில் கட்டப்பட்டுள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் துணை சுகாதார நிலையங்களும் திறந்து வைக்கப்படவுள்ளன.
இவ்வாறு அமைச்சர் மா.சுப்பிர மணியன் தெரிவித்தார்.