புதுடெல்லி: எம்.பி. பதவி கிடைத்தவுடனேயே மீண்டும் துக்ளக் சாலை பங்களாவை ராகுல் காந்திக்கு ஒதுக்கியதிலிருந்து பிரதமர் நரேந்திர மோடியின் பெரிய மனதை ராகுல் காந்தி புரிந்து கொள்ள வேண்டும் என்று கூறிய பாஜக எம்.பி.க்கு காங்கிரஸ் பதிலடி கொடுத்துள்ளது.
அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட 2 ஆண்டு சிறை தண்டனைக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்தது. இதையடுத்து அவருக்கு மீண்டும் மக்களவை எம்.பி. பதவி வழங்கப்பட்டது.
மக்களவை எம்.பி பதவியில் இருந்து தகுதியிழப்பு செய்யப்பட்ட தால், டெல்லி துக்ளக் சாலையில் வழங்கப்பட்டிருந்த 12-ம் எண் அரசு வீட்டை ராகுல் காந்தி கடந்த ஏப்ரல் மாதம் காலி செய்து, தாய் சோனியா வீட்டில் குடியேறினார். தற்போது அவர் மீண்டும் எம்.பி.யாகியுள்ளதையடுத்து, அவருக்கு மீண்டும் அதே வீடு ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ராகுல் காந்திக்கு மீண்டும் பங்களா ஒதுக்கப்பட்டது குறித்து கருத்து தெரிவித்த பாஜக எம்.பி ரவி கிஷன், “பிரதமரின் பெரிய மனதைப் புரிந்து கொள்ளுங்கள் ராகுல் அவர்களே. உங்கள் தண்டனை மீது இடைக்கால தடை தான் விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் பிரதமர் மோடி உங்களுக்கு மீண்டும் துக்ளக் சாலை பங்களாவை வழங்கியுள்ளார். அவருடைய பெரிய மனதைப் புரிந்து கொண்டு பாராட்டுங்கள். ” என்று கூறியிருந்தார்.
இது குறித்து காங்கிரஸ் கட்சியின் சுப்ரியா ஸ்ரீநடே கூறுகையில், “துக்ளக் சாலை பங்களா ஒன்றும் பிரதமர் மோடியின் குடும்பச் சொத்து அல்ல. அது ராகுல் காந்திக்கு மக்கள் வாக்களித்ததால் கிடைத்தது. இதில் மோடி எந்த சகாயமும் செய்யவில்லை” என்று பதிலடி கொடுத்துள்ளார்.
“राहुल गांधी को बंगला मिला, ये मोदी जी का बड़प्पन है, कभी तो उनकी तारीफ करिए”- @ravikishann pic.twitter.com/KtSDVNZn9Y
— Utkarsh Singh (@UtkarshSingh_) August 8, 2023