சென்னை: பாரத் கவுரவ் திட்டத்தின் கீழ் தெற்கு ரயில்வேயில் 50 ரயில்கள் இயக்கப்பட்டு, ரூ.34 கோடி வருவாய் கிடைத்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்தியாவின் கலாச்சாரம் மற்றும் வரலாற்றுச் சிறப்பு வாய்ந்தஇடங்களை மக்கள் கண்டுகளிக்கும் வகையில் ‘பாரத் கவுரவ்’ ரயில் திட்டத்தை இந்திய ரயில்வே கடந்த ஆண்டு நவம்பர் 23-ம் தேதி அறிமுகப்படுத்தியது.
இந்த திட்டத்தில் ரயில்களை இயக்குவது மட்டுமே ரயில்வே நிர்வாகத்தின் பொறுப்பு. மற்ற சேவைகளை தனியார் நிறுவனங்கள் கவனிப்பார்கள்.
பாரத் கவுரவ் ரயில் திட்டத்தின் கீழ் தெற்கு ரயில்வேயில் கோவை-ஷீரடிக்கு கடந்த ஆண்டு ஜூன்14-ம் தேதி முதல் ரயில் இயக்கப்பட்டது. இதுபோல, தனியார் ரயில்கள் இயக்குவது படிப்படியாக அதிகரித்தது. தற்போது 50-வது பாரத் கவுரவ் ரயிலாக கங்கா ஸ்நானா யாத்ரா தீபாவளி சிறப்பு ரயில் இயக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது: பாரத் கவுரத் திட்டத்தின் கீழ் 50 ரயில்கள் இயக்கப்பட்டுள்ளன. மொத்தம் 2 லட்சத்து 26 ஆயிரத்து 489 கி.மீ. சென்று வந்துள்ள இந்த ரயில்களில் 24,848 பேர் பயணம் செய்துள்ளனர்.
இந்தியாவில் பிரபலமான இடங்களுக்கு பயணிகள் அழைத்துச் செல்லப்பட்டு, தெற்கு ரயில்வேக்கு மொத்தம் ரூ.34 கோடி வருவாய் கிடைத்துள்ளது.
தற்போது பதிவு செய்யப்பட்ட 4 நிறுவனங்கள் ரயில் சேவையைவழங்குகின்றன. இதுதவிர, பாரத்கவுரவ் ரயில் இணையதள போர்ட்டல் மூலமாக பதிவு செய்யப்பட்ட சேவை வழங்குநர்களாக 11 நிறுவனங்கள் செயல்படுகின்றன. வரும் மாதங்களில் இந்த ரயில் சேவை அதிகரிக்கும்.
இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.