அரூர்: தருமபுரி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் பாப்பிரெட்டிப்பட்டி கிளையில், கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க வங்கிக் கணக்கு தொடங்க விண்ணப்பித்திருந்தனர்.
இதில், சிலருக்கு வங்கிக் கணக்கு புத்தகம் கிடைத்த நிலையில் பெரும்பாலானோருக்கு வங்கிக் கணக்கு புத்தகம் கிடைக்கவில்லை என கூறப்படுகிறது. இது குறித்து வங்கிக் கிளைக்கு சென்று பெண்கள் கேட்டனர். விண்ணப்பங்கள் வங்கிக்கு வரவில்லை என அலுவலர்கள் கூறியுள்ளனர்.
இந்நிலையில் வங்கிக்கு வெளியே குப்பையில் வங்கிக் கணக்கு தொடங்குவதற்காக பெண்கள் அளித்திருந்த 100-க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் கிடந்தன. இது குறித்து வங்கி அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்த நிலையில், இதுகுறித்து விசாரித்து தவறுக்கு காரணமானவர்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், கிடைத்த விண்ணப்பங்களின் பேரில் வங்கிக் கணக்கு தொடங்க நடவடிக்கை எடுப்பதாகவும் வங்கி அதிகாரிகள் தெரிவித்தனர்.