அரூர்: பாப்பிரெட்டிப்பட்டி அருகேயுள்ள வாணியாறு மற்றும் வரட்டாறு அணைகளின் நீர்மட்டம் தொடர் மழையால் உயர்ந்து வருகிறது.
தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அடுத்துள்ள வாணியாறு அணையின் நீர்மட்டம் கடந்த வாரம் 30.83 அடியாக இருந்தது. இந்நிலையில், அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.
நேற்று மாலை 6 மணி நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 35 அடியாக உயர்ந்துள்ளது. இதேபோல் அரூர் அருகேயுள்ள வள்ளிமதுரை அணையின் நீர்மட்டமும் மழையின் காரணமாக உயரத் தொடங்கியுள்ளது. சித்தேரி மலைப்பகுதியின் அடிவாரத்தில் அமைந்துள்ள இந்த அணையின் மொத்த உயரம் 34.5 அடியாகும்.
அணையின் மூலம் வள்ளி மதுரை, அச்சல்வாடி, தாதராவலசை, குடிமியாம்பட்டி, எல்லப்புடையாம்பட்டி உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள விளை நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. சித்தோி மலைப்பகுதியில் கடந்த இரு தினங்களாக பெய்து வரும் மழை காரணமாக அணையின் நீர்மட்டம் 20 அடியாக உயர்ந்துள்ளது.
தொடர்ந்து மழை பெய்து வருவதால் அணைக்கு நீர் வரத்து மேலும் அதிகரிக்கும் வாய்ப்புள்ளதாக பொதுப் பணித்துறையினர் தெரிவித்தனர்.