Thursday , November 30 2023
1154415

“பாஜக வெற்றி பெற்றால் அதானிக்கே வளர்ச்சி கிட்டும்” – ராகுல் காந்தி @ ராஜஸ்தான் | If BJP wins, only Adani will get development – Rahul Gandhi election campaign in Rajasthan

சுரு (ராஜஸ்தான்): “ராஜஸ்தானில் பாஜக வெற்றி பெற்றால், அதானிக்கே வளர்ச்சி கிட்டும்; ஏழைகளுக்கு எதுவும் கிடைக்காது” என்று காங்கிரஸ் முக்கியத் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.

ராஜஸ்தான் சட்டப்பேரவைத் தேர்தல் வரும் 25-ம் தேதி நடைபெற உள்ள நிலையில், அங்கு தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது. சுரு தொகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் உரையாற்றிய ராகுல் காந்தி, “ராஜஸ்தானில் தற்போதுள்ள காங்கிரஸ் அரசு மாநிலத்திற்காக பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி உள்ளது. மக்கள் அவற்றை நினைவுகூர வேண்டும். ஓய்வூதிய திட்டம், சுகாதார திட்டம், ரூ.500-க்கு சிலிண்டர், ஆண்டுக்கு மகளிருக்கு ரூ.10 ஆயிரம் ஆகிய திட்டங்களை காங்கிரஸ் அறிவித்துள்ளது. ஒருவேளை இங்கு பாஜக ஆட்சிக்கு வந்தால், இந்தத் திட்டங்கள் கிடைக்காது. அவர்கள், கோடீஸ்வரர்களுக்கு ஆதரவாகத்தான் செயல்டுவார்கள். பாஜக ஆட்சிக்கு வந்தால் அதானியின் வளர்ச்சிதான் அதிகரிக்கும். ஏழைகளுக்கு எதுவும் கிடைக்காது.

ராஜஸ்தானில் உள்ள காங்கிரஸ் அரசு ஏழைகளை பாதுகாத்து வருகிறது. ஆனால், மத்தியில் உள்ள நரேந்திர மோடி அரசு ஏழைகளுக்கு எதிராக செயல்பட்டு வருகிறது. அவர்கள் ஜிஎஸ்டியை அமல்படுத்தினார்கள். இதன் காரணமாக தற்போது விவசாயிகளும் வரி செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. பணமதிப்பிழப்பு நடவடிக்கையை எடுத்தார்கள். இதன் காரணமாக சிறு, குறு, நடுத்தர தொழில்கள் அழிந்தன. எங்கே பார்த்தாலும் அதானியின் நிறுவனங்கள்தான் வேலைகளை எடுத்துச் செய்து கொண்டிருக்கிறார்கள். விமான நிலையம், துறைமுகம், சிமெண்ட் நிறுவனங்கள், சாலைகள் போன்ற அனைத்து தொழில்களையும் அவர்கள்தான் மேற்கொள்கிறார்கள். இதில் இருந்து மக்கள் தெரிந்துகொள்ள வேண்டியது என்னவென்றால், பாஜக எப்போதும் வசதிபடைத்தவர்களுக்காகத்தான் செயல்படும். ஏழைகளுக்காக அல்ல. அதானிக்குத்தான் அவர்கள் உதவுவார்கள். அதானியின் பணம் வெளிநாடுகளிலும் பயன்படுத்தப்படுகிறது. வெளிநாட்டு நிறுவனங்களை அதானி நிறுவனம் வாங்குகிறது.

கருப்புப் பணத்தை ஒழிக்காவிட்டால் என்னை தூக்கில் போடுங்கள் என்றார் நரேந்திர மோடி. ஆனால், கருப்புப் பணத்தை அவர் ஒழிக்கவில்லை. கரோனா பெருந்தொற்று உச்சத்தில் இருந்தபோது, மொபைல் போன்களின் டார்ச்களை இயக்கி ஒளிரச் செய்யுங்கள் என மோடி கூறினார். ஆனால், ஆக்கிஸஜன், மருந்துகள் இன்றி மக்கள் செத்துக்கொண்டிருந்தார்கள். அதேநேரத்தில், ராஜஸ்தானில் மாநில அரசின் முயற்சியால் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு வீட்டுக்கும் உணவுப் பொட்டலங்கள் விநியோகிக்கப்பட்டன. மருந்துகள் கொடுக்கப்பட்டு உயிர்கள் காப்பாற்றப்பட்டன. ஏனெனில், காங்கிரஸ் ஏழைகளுக்கான அரசை நடத்துகிறது. பணம் ஏழைகளின் பைகளுக்குச் செல்வதற்கான நடவடிக்கைகளை காங்கிரஸ் எடுக்கிறது. ஆனால், பாஜக அதானியின் பைகளுக்கு பணம் செல்வதை உறுதிப்படுத்துகிறது” என்று ராகுல் காந்தி பேசினார்.

Thanks

Check Also

1161300

தெலங்கானா தேர்தல் | மாலை 3 மணி வரை 51.89% வாக்குகள் பதிவு; ஹைதராபாத்தில் மந்தம் | Telangana Assembly elections | As of 3 p.m. on Thursday, 51.89% voters had cast their votes

ஹைதராபாத்: தெலங்கானாவில் மாலை 3 மணி நிலவரப்படி 51.89% வாக்குகள் பதிவாகி உள்ளன. தெலங்கானாவில் மொத்தமுள்ள 119 தொகுதிகளுக்கு இன்று …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *