சென்னை: மக்களவை தேர்தல் கூட்டணி மற்றும் பாஜக குறித்து பொதுவெளியில் அதிமுக நிர்வாகிகள் யாரும் கருத்து தெரிவிக்க வேண்டாம் என்று கட்சித் தலைமை அறிவுறுத்தி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை சில தினங்களுக்கு முன்பு, அறிஞர் அண்ணா குறித்து கருத்து தெரிவித்திருந்தார். அதற்குஅதிமுக முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் கண்டனம் தெரிவித்திருந்தார். சில தினங்களுக்கு முன் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தபோது, “முன்னாள்முதல்வர் ஜெயலலிதாவை விமர்சனம் செய்த அண்ணாமலைக்கு எதிராக அதிமுகவினர் கடுமையான எதிர்ப்பை பதிவு செய்தனர். அதன்பிறகு அண்ணா குறித்து பேசுகிறார். கடுமையான கண்டனத்தை தெரிவித்த நிலையில் அதற்கும் திருந்தாமல், திரும்பவும் பெரியார் குறித்தும், மற்ற விஷயங்கள் குறித்தும் கூட்டணியில் இருந்துகொண்டு கூட்டணி தர்மத்தை மீறி பேசுகின்ற செயலை கட்சித் தொண்டர்கள் எந்த நிலையிலும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். அதிமுக கூட்டணியில் தற்போது பாஜக இல்லை. கூட்டணி குறித்து தேர்தல் வரும்போதுதான் முடிவு செய்ய முடியும். இதுதான் கட்சியின் முடிவு என்று தெரிவித்திருந்தார். இதனால் தமிழக அரசியலில் பரபரப்பு ஏற்பட்டது.
அண்மையில் டெல்லியில் நடைபெற்ற கூட்டணிக் கட்சித் தலைவர்களுடனான மக்களவை தேர்தல் தொடர்பான ஆலோசனைக் கூட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமியை தனது அருகிலேயே பிரதமர் அமர வைத்துக்கொண்டார். இந்நிலையில் ஜெயக்குமாரின் இந்த அறிவிப்பு பாஜக நிர்வாகிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து, அதிமுகவின் நிலைப்பாட்டை தமிழக பாஜகமூத்த நிர்வாகிகளும் விமர்சித்தனர்.
இந்த சூழலில், தமிழக நிலவரம் தொடர்பாக தேசிய பாஜக தலைமைதகவல் கேட்டு பெற்றதாகவும், பின்னர் ஒரு முடிவெடுத்து, அதிமுக மூத்த நிர்வாகிகளுடன் கலந்தாலோசித்ததாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் அதிமுக மாவட்டசெயலாளர்கள், தலைமைக் கழகநிர்வாகிகளுக்கு அதிமுக தலைமைஅனுப்பியுள்ள கடிதத்தில், இனி,மக்களவைத் தேர்தல் கூட்டணி, பாஜக குறித்து பொதுவெளியில் யாரும் கருத்து தெரிவிக்க வேண்டாம் என்று அறிவுறுத்தி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதேபோல் பாஜக நிர்வாகிகளுக்கு சில அறிவுரைகளை பாஜக தலைமை வழங்கி இருப்பதாகவும் கூறப்படுகிறது.