மதுரை: பழநி கோயில் நவராத்திரி விழாவில் யாருக்கும் சிறப்பு மரியாதை வழங்கப்படாது என உயர் நீதிமன்றத்தில் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
பழநி சிவானந்தா புலிப்பாணி பாத்திர சுவாமிகள் தரப்பில் உயர்நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு: பழநி கோயிலில் ஆண்டு தோறும் நவராத்திரி விழா நடைபெறும். இந்த விழாவில் கோயில் நிர்வாகம் தரப்பில் மரியாதையுடன் அழைத்துச் செல்லப்பட்டு சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவர்.
கடந்த ஆண்டு வரை நவராத்திரி விழா அன்று புலிப்பாணி கரூர் வழி வாரிசுகளுக்கு பழநி கோயில் நிர்வாகம் சார்பில் அழைத்துச் செல்லப்பட்டு சாமி தரிசனம் செய்ய வைக்கப்பட்டனர். இந்தாண்டு அக்.15 முதல் 23 வரை நவராத்திரி விழா நடைபெறுகிறது. இவ்விழாவில் பழநி கோயில் நிர்வாகம் சார்பில் உரிய மரியாதை வழங்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த வழக்கு நீதிபதி எஸ்.ஸ்ரீமதி முன்பு விசாரணைக்கு வந்தது. அரசு வழக்கறிஞர் வாதிடுகையில், நவராத்திரி விழாவில் பழநி கோயில் சார்பில் யாருக்கும் சிறப்பு மரியாதை வழங்கப்படாது. கட்டளைதாரர்களுக்கு என்ன மரியாதை வழங்க வேண்டுமோ, அந்த மரியாதை வழங்கப்படும் என்றார். இதை பதிவு செய்து கொண்டு வழக்கை முடித்து நீதிபதி உத்தரவிட்டார்.