Thursday , November 30 2023
1127787

பழநியை மிரட்டும் காட்டு யானைகள்..! – பயிர்களைக் காக்க போராடும் விவசாயிகள் | Wild Elephants Threatening Palani..! – Farmers Fighting to Protect Crops

பழநி: பழநியில் வனப்பகுதியை ஒட்டியுள்ள கிராமங் களில் யானைகள் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. யானைகளிடம் இருந்து பயிர்களை காப்பாற்ற விவசாயிகள் போராடி வருகின்றனர்.

பழநி மற்றும் சுற்றுவட்டாரத்தில் கிராமங்களில் நெல், வாழை, கரும்பு, மக்காச்சோளம், தென்னை அதிகளவில் சாகுபடி செய்யப்படுகிறது. இங்குள்ள பெரும்பாலான விவசாய நிலங்கள், மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரப் பகுதியில் இருப்பதால் யானை, காட்டு மாடு, காட்டுப் பன்றி உள்ளிட்ட வன விலங்குகளிடம் இருந்து பயிர்களை காப்பாற்ற விவசாயிகள் அதிகம் சிரமப்படுகின்றனர்.

இந்நிலையில் பழநி அருகேயுள்ள ஆயக்குடி, சட்டப்பாறை, கோம்பைப்பட்டி, கணக்கன்பட்டி, பாலாறு பொருந்தலாறு பகுதியில் காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. இரவு நேரங்களில் மலையடிவாரத்தில் உள்ள தோட்டங்கள், விளை நிலங்களுக்குள் புகும் யானைகள் பயிர்களை தின்று சேதப்படுத்துகின்றன.

இது மட்டுமின்றி, சில மாதங்களுக்கு முன்பு விவசாயிகள் இருவர் யானை தாக்கியதில் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. கடந்த செப்.7-ம் தேதி கோம்பைப்பட்டியில் தோட்டத் துக்குள் புகுந்த யானை, அங்கிருந்த 2 விவசாயிகளின் வீடுகளை சேதப்படுத்திவிட்டு, அரிசி மற்றும் கால்நடை தீவனத்தை தின்று விட்டு சென்றது.

மாலையில் வனப்பகுதியில் இருந்து வெளியேறும் யானை மறுநாள் காலை வரை ஊருக்குள், தோட்டங் களில் நடமாடுகிறது. அச்சமயத்தில் வெளியே யாரும் வந்தால் அவர்களை யானை விரட்டுகிறது. இதனால் பொதுமக்கள், விவசாயிகள் அச்சமடைகின்றனர். யானைகளை வனப் பகுதிக்குள் விரட்ட வனத்துறை பல்வேறு உத்திகளை மேற் கொண்டாலும் முழுவதுமாக கட்டுப்படுத்த முடியவில்லை. இதனால் விவசாயிகள் நிம்மதி இழந்துள்ளனர்.

விவசாயப் பணிகள் முடக்கம்: கோம்பைப்பட்டி விவசாயி பி.துரைச்சாமி கூறியதாவது: கோம்பைப்பட்டி பகுதியில் யானைக் கூட்டம் பல நாட்களாக சுற்றி திரிந்து பயிர்கள், சோலார் வேலியை சேதப்படுத்தியது. இதனால் விவசாயப் பணிகளை மேற்கொள்ள முடியவில்லை. அச்சத்தில் வேலையாட்கள் வருவதில்லை. இதனால் விவசாயப் பணிகள் முடங்கி கிடக்கின்றன.

தோட்டங்களுக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்துவதால் நஷ்டம் ஏற்படுகிறது. வனத்துறையினருக்கு தெரிவித்தால் விரட்டுவதாக கூறுகின்றனர். ஆனால், மீண்டும் யானைகள் ஊருக்குள் நுழைகின்றன. யானைகளை வனத்துக்குள் நிரந்தரமாக விரட்டி விவசாயப் பணிகள் தடையின்றி நடைபெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

இழப்பீடு வழங்க தாமதம் – ஆயக்குடி விவசாயி அரவிந்தன் கூறியதாவது: ஆயக்குடி அருகே சட்டப்பாறை பகுதியில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக ஒற்றை யானை நடமாட்டம் உள்ளது. இரவு நேரங்களில் தோட்டங்களுக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்துகிறது. அவ்வப்போது, காட்டு மாடு தொந்தரவும் உள்ளது.

யானைகள் ஊருக்குள் நுழையாமல் இருக்க சோலார் வேலி மட்டுமின்றி, அகழி அமைக்க வேண்டும். வன விலங்குகள் தொல்லையால் விவசாய பணி மேற்கொள்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. வனப்பகுதியில் இருந்து யானைகள் ஊருக்குள் நுழையாமல் இருக்க வனத்துறை சோலார் மின் வேலி மட்டுமின்றி அகழி அமைக்க வேண்டும்.

யானைகள் புகும் பாதைகளை கண்டறிந்து அதே இடத்தில் யானைகளை தடுத்து நிறுத்த வேண்டும். பயிர் சேதம் ஏற்பட்டால் இழப்பீடு வழங்க தாமதம் செய்யாமல் உடனே வழங்க வேண்டும் என்றார்.

இது குறித்து ஒட்டன்சத்திரம் வனச்சரக அலுவலர் ராஜா கூறியதாவது: வனத்துறை சார்பில் 13 பேர் கொண்ட குழு அமைத்து யானைகள் நடமாட்டம் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. யானைகளை வனப்பகுதிக்குள் விரட்ட, சிறப்பு குழுவினர் இரு பிரிவாக பிரிந்து பழநி மற்றும் ஒட்டன்சத்திரம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இரவு, பகல் பாராமல் யானைகளை விரட்டும் பணியில் ஈடுபட்டுள்ளோம். பயிர் சேதம் ஏற்படுவதை தடுக்க, யானைகள் விரும்பாத பயிர் ரகங்களை பயிரிட விவசாயிகள் முன்வர வேண்டும் என்று கூறினார். பழநி வனச்சரக அலுவலர் கோகுலகண்ணன் கூறுகையில், பொருந்தலாறு அணை பகுதியில் யானைகள் நடமாட்டம் உள்ளது.

தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். இதுகுறித்து பொதுமக்களுக்கும் அடிக்கடி எச்சரிக்கை விடுக்கப்படுகிறது. வேளாண், தோட்டக்கலைத் துறையினர் மூலம் பயிர் சேதத்தை கணக்கிட்டு இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார்.

Thanks

Check Also

1161021

மக்களவைத் தேர்தலுக்கு முன்பாக மதுரை குடிநீர் திட்டத்தை விரைந்து செயல்படுத்த முடிவு | Decision to Speed Up Implementation of Madurai Drinking Water Project before Lok Sabha Elections

கூடலூர்: தேனியில் நடைபெற்று வரும் மதுரை குடிநீர் திட்டப் பணிகளை வரும் மக்களவைத் தேர்தலுக்கு முன்பாக முடிக்க திட்டமிடப் பட்டுள்ளது. …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *