சென்னை: பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்களுக்கு நாளை (நவ.16) தொடங்கி டிச.8-ம் தேதி வரை பல்வேறு கட்டங்களாக பயிற்சி வழங்கப்பட உள்ளது.
இதுகுறித்து வெளியான சுற்றறிக்கை: தமிழகத்தில் அரசுப் பள்ளிகளின் மேம்பாட்டுக்காக ஏற்படுத்தப்பட்ட பள்ளி மேலாண்மைக் குழுக்கள் (எஸ்எம்சி), பெற்றோர் பங்களிப்பு இருக்கும் வகையில் கடந்த ஆண்டு மறுகட்டமைப்பு செய்யப்பட்டன. குழுவில் இடம்பெற்றுள்ள உறுப்பினர்களுக்கு பயிற்சி அளிப்பதற்காக மாநில, மாவட்ட அளவில் முதன்மை கருத்தாளர்களுக்கு கடந்த மே, செப்டம்பர் மாதங்களில் பயிற்சி வழங்கப்பட்டது.
இதையடுத்து எஸ்எம்சி உறுப்பினர்களுக்கு ஆசிரியர் பயிற்றுநர்களை கொண்டும் பயிற்சி தர திட்டமிடப்பட்டுள்ளது. இந்த பயிற்சி, நவ.16 முதல் டிச.8-ம் தேதி வரை பல பிரிவுகளாக வழங்கப்படும். ஒவ்வொரு பள்ளியில் இருந்தும் எஸ்எம்சி குழுத் தலைவர் உட்பட 5 நபர்கள் பயிற்சியில் பங்கேற்க வேண்டும்.
பள்ளிகள், குறுவள மையங்கள், வட்டார வள மையங்களில் பயிற்சிகள் வழங்கப்படும். இவ்வாறு சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.