சென்னை: சென்னையில் பட்டாசு விதிமீறல்கள் தொடர்பாக கடந்த 3 நாட்களில் 581 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. சென்னையில் கடந்த 11, 12, 13-ம் தேதிகளில் அனுமதித்த நேரத்தை மீறி பட்டாசுகள் வெடித்தது தொடர்பாக 554 வழக்குகள், விதிகளை மீறி பட்டாசு கடை நடத்தியது தொடர்பாக 8 வழக்குகள், அதிகமான சத்தம் எழுப்பும் பட்டாசுகளை வெடித்தது தொடர்பாக 19 வழக்குகள் என மேற்கண்ட 3 நாட்களில் மொத்தம் 581 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்று சென்னை காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் தெரிவித்துள்ளார்.
சில இடங்களில் கவனக்குறைவாக பட்டாசு வெடித்ததால் தீவிபத்து நேரிட்டது. பட்டாசு விபத்தில் காயமடைந்து சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் 18 பேர், ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் 2 பேர் அனுமதிக்கப்பட்டனர். காயமடைந்த 20 பேரில் 9 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினர். 11 பேர் சிகிச்சையில் உள்ளனர். கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பார்வையிட்டார். கடந்த ஆண்டுகளை ஒப்பிடும்போது, இந்த ஆண்டு பட்டாசு விபத்துகள் குறைந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
மயிலாப்பூர் சாய்பாபா கோயிலில் கட்டுமானப் பணி நடந்து வருவதால், கோபுரத்தை சுற்றி ஓலைகளால் மறைப்பு அமைக்கப்பட்டிருந்தது. நேற்று முன்தினம் கோயிலை சுற்றியுள்ள பகுதிகளில்ஏராளமானோர் பட்டாசு, மத்தாப்புகளை கொளுத்தினர். அப்போது, ஒரு பட்டாசு வெடித்ததில் பறந்து வந்த தீப்பொறி, கோயில் கோபுரத்தை சுற்றி போடப்பட்டிருந்த ஓலைகள் மீது விழுந்து தீப்பிடித்தது. மயிலாப்பூர் உள்ளிட்ட 3 இடங்களில் இருந்து வந்த தீயணைப்பு படை வீரர்கள் தீயை அணைத்தனர்.