புதுடெல்லி: பஞ்சாப்பில் மீண்டும் தீவிரவாதத்தை ஏற்படுத்த முயற்சி மேற்கொள்ளும் காலிஸ்தான் இயக்கத்தினர் மீது மத்திய அரசு தொடர் நடவடிக்கை எடுத்து வருகிறது.
காலிஸ்தான் தனி நாடு கோரும் பஞ்சாப்பின் பிரிவினை ஆதரவாளர்களில் முக்கியமானவர் ஹர்தீப் சிங் நிஜார். கடந்த 1997-ல் கனடா சென்ற இவர், காலிஸ்தான் டைகர் ஃபோர்ஸ் அமைப்பின் தலைவராக பொறுப்பேற்றார். அங்கிருந்தபடி இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கைகளில் இவர் ஈடுபட்டார்.
இந்நிலையில் கடந்த ஜூன் 18-ம் தேதி மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். இதற்கு இந்தியா மீது குற்றம் சுமத்திய கனடா பிரதமர் ட்ரூடோ, அங்குள்ள இந்திய தூதரக அதிகாரி பவன்குமார் ராயை கனடாவை விட்டு வெளியேற உத்தரவிட்டார். இதற்குகண்டனம் தெரிவித்த இந்தியா, பதிலடியாக, இந்தியாவில் உள்ள கனடா பிரதிநிதி ஆலிவர் சில்வர்ஸடரை வெளியேற உத்தரவிட்டது.
இந்நிலையில், காலிஸ்தான் இயக்கத்தினர் மீது மத்திய அரசு தொடர் நடவடிக்கை எடுத்து வருகிறது. காலிஸ்தான் ஆதரவு தலைவர்களை தீவிரவாதிகளாக அறிவிக்கும் முடிவை மத்திய அரசு கடந்த 2020-ம் ஆண்டு ஜூலை 1-ம் தேதி எடுத்தது.
வெளிநாடுகளில் இருந்து இந்தியாவுக்கு எதிராக செயல்படும் ஹர்தீப் சிங் நிஜார் உட்பட 9 பேரை தீவிரவாதிகள் பட்டியலில் சேர்த்து மத்திய அரசு. இவர்கள் பஞ்சாப் இளைஞர்களை தீவிரவாத இயக்கத்தில் சேர தூண்டினர். காலிஸ்தான் டைகர் ஃபோர்ஸ் அமைப்பை தீவிரவாத இயக்கமாக மத்திய அரசு கடந்த பிப்ரவரியில் அறிவித்தது.
நிஜாரை தவிர, அமெரிக்காவில் உள்ள சீக்ஸ் ஃபார் ஜஸ்ட்டிஸ் அமைப்பின் முக்கிய உறுப்பினர் குர்பத்வந் சிங் பன்னு, பாகிஸ்தானைச் சேர்ந்த பாபர் கல்சா இன்டர்நேஷனல் அமைப்பின் தலைவர் வதாவா சிங் பாபர், சர்வதேச சீக்கிய இளைஞர் கூட்டமைப்பை நடத்தும் லக்பிர் சிங் ரோட், பாகிஸ்தானைச் சேர்ந்த காலிஸ்தான் ஜிந்தாபாத் படைத் தலைவர் ரஞ்சீத் சிங், காலிஸ்தான் கமாண்டோ படையைச் சேர்ந்த பரம்ஜித் சிங், ஜெர்மனியில் உள்ள காலிஸ்தான் ஜிந்தாபாத் அமைப்பின் முக்கிய உறுப்பினர்கள் புபிந்தர் சிங் பிண்டா, குர்மீத் சிங் பக்கா, இங்கிலாந்தில் பாபர் கல்சா இன்டர்நேஷனல் அமைப்பின் தலைவர் பரம்ஜித் சிங் ஆகியோரும் தீவிரவாதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் வெளிநாடுகளில் இருந்தபடி இந்தியாவில் தீவிரவாத செயல்களில் ஈடுபடுகின்றனர். இவர்களின் சதித் செயல்களை என்ஐஏ தீவிரமாக கண்காணித்து நடவடிக்கை எடுத்து வருகிறது.
காலிஸ்தான் டைகர் போர்ஸ் அமைப்பின் நிஜார் மற்றும் அர்ஷ்தீப் சிங் கில் ஆகியோர், துப்பாக்கி சுடுதலில் வல்லவர்களாக திகழும் இளைஞர்களுக்கு விசா, கனடாவில் வேலை என ஆசை வார்த்தை கூறி இந்தியாவில் தீவிரவாத செயல்களில் ஈடுபட வைத்ததும் என்ஐஏ விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்தியாவில் காலிஸ்தான் டைகர் ஃபோர்ஸ் அமைப்பில் சேரும் இளைஞர்களுக்கு தேவையான நிதி மற்றும் ஆயுதங்களை வெளிநாடுகளில் உள்ள காலிஸ்தான் அமைப்பினர் அனுப்பி வருவதும் என்ஐஏ விசாரணையில் தெரியவந்துள்ளது.