மதுரை: நெல்லை – சென்னை இடையே ‘வந்தே பாரத்’ துரித ரயில்வே செப்டம்பர் 24-ல் தொடங்குகிறது. இந்த ரயில் விருதுநகர், மதுரை, திண்டுக்கல் உட்பட 5 இடங்களில் நின்று செல்லும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
நெல்லை – சென்னை உட்பட இந்தியாவில் 9 ‘வந்தே பாரத்’ ரயில் சேவைகளை செப்.,24ல் பிரதமர் மோடி காணொளி மூலம் தொடங்கி வைக்கிறார். இதற்காக நெல்லை – மதுரை மற்றும் சென்னை இடையே தண்டவாள ஆய்வு பணி அந்தந்த கோட்டம் சார்பில் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இது குறித்து மதுரை ரயில்வே கோட்ட மேலாளர் ப.ஆனந்த் செய்தியாளர்களிடம் கூறியது: “ரயில்வே வாரியத்திடம் இருந்து எங்களுக்கு திடீரென தகவல் வந்துள்ளது. செப்டம்பர் 24-ம் தேதி, பிரதமர் மோடி மனதின் குரல் நிகழ்ச்சிக்கு பிறகு நெல்லை- சென்னை உட்பட தெற்கு ரயில்வே பிரிவில் 3 என, மொத்தம் 9 ‘வந்தே பாரத் ரயில்’ சேவைகளைத் தொடங்கி வைக்கிறார்.
இதையொட்டி ரயில் பாதைகளை ஆய்வு செய்து, வாரியத்துக்கு அறிக்கை அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கு பிறகு விழா நேரம் அறிவிக்கப்படும். அநேகமாக மதியத்துக்கு மேல் இருக்கலாம். நெல்லையில் தான் தொடக்க விழாவுக்கு ஏற்பாடு செய்கிறோம்.
முதல் கட்டமாக 8 பெட்டிகளுடன் இச்சேவை தொடங்குகிறது. பிறகு பெட்டிகள் அதிகரிக்கலாம். டிக்கெட் போன்ற விவரம் பிறகு அறிவிக்கப்படும். இந்த ரயில் விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, விழுப்புரம் நின்று செல்லும் வகையில் இயக்கப்படும்” என்றார்.