கூடலூர்: கேரளாவில் அதிரடிப் படையினர் துப்பாக்கிச் சூட்டில் மாவோயிஸ்டுகள் சிலர் காயமுற்றதாக வெளியான தகவலையடுத்து, நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே தமிழக-கேரள வன எல்லைகளில் உள்ள சோதனைச் சாவடிகளில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ப.சுந்தரவடிவேல் ஆய்வு மேற்கொண்டார்.
நீலகிரி மாவட்டம், கூடலூர் மற்றும் பந்தலூர் தாலுகாக்கள் கேரளம் மற்றும் கா்நாடகா வன எல்லைகளில் அமைந்துள்ளன. கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் மாவோயிஸ்டுகளின் நடமாட்டம் தொடா்ந்து அதிரிகரித்து வருகிறது.
கேரள மாநிலத்தில் தண்டர்போல்ட் என்று அழைக்கப்படும் மாவோயிஸ்ட்டு தடுப்பு சிறப்பு அதிரடிப்படைக்கும் மாவோயிஸ்டுகளுக்கும் துப்பாக்கிச் சண்டை நடைபெற்றதாக கிடைத்த தகவலையடுத்து, எல்லைகளில் உள்ள சோதனைச் சாவடிகளில் கண்காணிப்பை துரிதப்படுத்துவதுடன், அங்கு மேற்கொள்ளப்பட்டு வரும் பாதுகாப்பு நடவடிக்கைகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ப.சுந்தரவடிவேல் ஆய்வு செய்து காவலர்களுக்கு அறிவுரை வழங்கினார்.
தமிழக-கேரள எல்லையில் உள்ள ஓவேலி, நாடுகாணி, சோலாடி, நம்பியார்குண்ணு, பாட்டவயல் உள்ளிட்ட அனைத்து சோதனைச் சாவடிகளிலும் பாதுகாப்பு குறித்து ஆய்வு மேற்கொண்டு அறிவுரைகளை வழங்கினார்.