Tuesday , November 28 2023
1153232

நகர் முழுவதும் பொங்கும் பாதாள சாக்கடை கழிவுநீர்: திணறும் மதுரை மாநகராட்சி | sewage water overflowing in Madurai the Corporation officials are numb

மதுரை: மதுரை மாநகராட்சியில் நகர் முழுவதும் திரும்பிய பக்கமெல்லாம் பாதாள சாக்கடை தொட்டிகள் பொங்கி கழிவு நீர் சாலைகளில் ஆறுபோல் ஓடுகின்றன. பருவமழை காலம் என்பதால் மழைநீருடன் கழிவு நீர் கலந்து பொதுமக்களுக்கு தொற்று நோய்கள் ஏற்படுகின்றன.

மதுரை மாநகராட்சியில் பிரிட்டிஷார் ஆட்சி முதல் பல்வேறு கட்டங்களாக பாதாள சாக்கடைத் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. இந்த பாதாள சாக்கடைத் திட்டங்களின் வரைப்படங்கள் மாநகராட்சியில் இல்லாததால் தற்போது பணிபுரியும் அதிகாரிகளால் கழிவு நீர் அடைப்பு, கசிவு மற்றும் பொங்குவதை உடனடியாக சரி செய்ய முடியவில்லை. ஒரு இடத்தில் அடைப்பை எடுத்தால் மற்றொரு பாதாள சாக்கடைத் தொட்டி வழியாக கழிவு நீர் பொங்கி வருகிறது. பாதாள சாக்கடை குழாய்களில் மண் சேர்ந்து அடைப்பு ஏற்பட்டு கழிவு நீர் பொங்குகிறது.

அதேபோல், ஆரம்பத்தில் 4 வீடுகளுடைய கழிவு நீர் போன இடத்தில், தற்போது 15-க்கும் மேற்பட்ட வீடுகளுடைய கழிவுநீர் வருவதால் அழுத்தம் அதிகமாகி கழிவு நீர் குழாய் உடைப்பு ஏற்படுகிறது. தற்போது வடகிழக்கு பருவமழை பெய்வதால் மழைநீரும் பாதாள சாக்கடை கழிவு நீர் குழாய்களில் புகுந்ததால், அழுத்தம் அதிகமாகி பாதாள சாக்கடை நகர் முழுவதும் உடைந்து வருகிறது.

மதுரை மாநகராட்சியின் 24-வது வார்டில் லெனின் தெரு, பூந்தமல்லி நகர், ராஜீவ் காந்தி தெரு, எம்ஜிஆர் தெரு, ஜீவா ரோடு போன்ற பகுதிகளில் பாதாள சாக்கடை நிரம்பி கழிவு நீர் தெரு தெருக்களில் ஓடுகிறது. அதனால், மக்கள் வீடுகளை விட்டு வெளியே வர முடியாமல் பாதிக்கப்பட்டுள்ளனர். கழிவு நீரின் தூர்நாற்றம் வீட்டிற்குள் வருவதால் மக்கள் வசிக்க முடியவில்லை. இதனால் அதிருப்தியடைந்த பொதுமக்கள், கையில் விளக்குமாறு ஏந்தி நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மதுரை கே.கே.நகர் மாவட்ட நீதிமன்றம் சாலையில், கடந்த 2 நாட்களாக பாதாள சாக்கடை உடைப்பு ஏற்பட்டு கழிவு நீர் சாலையில் பெருக்கெடுத்து ஓடுகிறது. உலக தமிழ்ச் சங்கம் பின்புறம் உள்ள குடியிருப்பு பகுதிகளில் கடந்த பல மாதமாகவே பாதாள சாக்கடை அடைப்பு ஏற்பட்டு கழிவு நீர் நிரந்தரமாக ஓடுகிறது. கே.கே.நகர் 80 அடி சாலையில் மழை பெய்யும்போதெல்லாம் கழிவுநீர் பாதாள சாக்கடையில் இருந்து பெருக்கெடுத்து ஓடுகிறது. ஒரு புறம் மழைநீர் வழிந்தோட வழியில்லாமல் குடியிருப்பு பகுதிகளில் தேங்கிநிற்க, மற்றொரு புறம் பாதாள சாக்கடை கழிவு நீரும் பொங்கி வருவதால் மாநகராட்சி அதிகாரிகள் செய்வதறியாது திகைத்துப் போய் உள்ளனர்.

Thanks

Check Also

1160324

கற்பிப்பதா, லேப்டாப்களை பாதுகாப்பதா? – அரசு பள்ளி தலைமை ஆசிரியர் பணி குறித்து ஐகோர்ட் சரமாரி கேள்வி | High Court talks on School HMs

மதுரை: “அரசு பள்ளி தலைமை ஆசிரியர்களின் பணி கல்வி கற்பிப்பதா? லேப்டாப்களை பாதுகாப்பதா?” என உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *