மும்பை: உலகக் கோப்பை தொடரின் அரை இறுதி ஆட்டத்தில் இந்திய அணி இன்று நியூஸிலாந்துடன் பலப்பரீட்சை நடத்துகிறது. இதையொட்டி நேற்று நடைபெற்ற பத்திரிகையாளர்கள் சந்திப்பின் போது இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா கூறியதாவது:
அதிர்ஷ்டம் சாதகமாக இருக்கும் நேரம் வந்துவிட்டது, தைரியமானவர்களுக்கு அதிர்ஷ்டம் சாதகமாக இருக்கும். லீக் சுற்றில் நாங்கள் செய்ததை அப்படியே தொடர வேண்டும்.அதை தவிர்த்து வேறு எதையும் செய்ய வேண்டும்என்று நான் நினைக்கவில்லை. உலகக் கோப்பையில் லீக் ஆட்டமாக இருந்தாலும் அல்லது அரை இறுதியாக இருந்தாலும் எப்போதும் அழுத்தம் இருக்கும். நாங்கள் முதல் ஆட்டத்தில் இருந்து கடைசி ஆட்டம் வரை அழுத்தத்தை சிறப்பாக கையாண்டோம். இதற்கு அணி சரியாக பதில் அளித்துள்ளது.
அடுத்த இரண்டு ஆட்டங்களிலும் நல்ல கிரிக்கெட் விளையாடுவதில் கவனம் செலுத்தி வருகிறோம். இந்திய கிரிக்கெட் வீரர்களாகிய எங்களுக்கு எப்போதுமே அழுத்தம் இருக்கும். அழுத்தங்கள் மற்றும் சவால்களில் கவனம் செலுத்தாமல் விளையாட்டில் கவனம் செலுத்த வேண்டும்,
நியூஸிலாந்து மிகவும் ஒழுக்கமான அணி. அவர்கள் ஸ்மார்ட் கிரிக்கெட் விளையாடுகிறார்கள், அவர்கள் எதிரணியை நன்கு புரிந்துகொள்கிறார்கள். எதிர் அணிகளின் மனநிலையையும் புரிந்து வைத்துள்ளனர். மேலும், அவர்கள் ஐசிசி தொடர்களில் அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டிகளில் மிகவும் சீரான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.
கபில் தேவ் தலைமையில் 1983-ம் ஆண்டு, தோனி தலைமையில் 2011-ம் ஆண்டு செய்த சாதனைகளை தொடர வேண்டிய அழுத்தம் இருக்கிறது. ஆனால் தற்போதுள்ள வீரர்கள் தங்களது ஆட்டத்தில் முன்னேற்றம் காண்பதையே விரும்புகின்றனர். இதுதான் இந்த அணியின் அழகே. முதன் முறையாக கோப்பையை வென்ற போது தற்போது அணியில் உள்ள வீரர்கள் பாதிபேர் பிறக்கவே இல்லை. கடைசியாக கோப்பையை வென்ற போது இப்போது அணியில் உள்ள பாதிபேர் இடம் பெறவில்லை.
கடந்த காலங்களில் கோப்பையை வென்றது குறித்து அணியில் வீரர்கள் பேசுவதை நான் பார்த்தது இல்லை. சிறப்பாக செயல்படுவதிலும், ஆட்டத்தை எவ்வாறு மேம்படுத்துவது என்பதிலும்தான் கவனம் செலுத்துகிறோம். இவ்வாறு ரோஹித் சர்மா கூறினார்.