கோவை: தமிழ்நாடு தோட்ட தொழிலதிபர் சங்கத்தின் 70-ம் ஆண்டு கூட்டம் கோவையில் நேற்று நடந்தது. இந்திய தேயிலை வாரிய செயல் இயக்குநர் எம்.முத்துக்குமார் பேசினார்.
தமிழ்நாடு தோட்ட தொழிலதிபர் சங்கத் தலைவர் வர்கீஸ் வைத்யன், தென்னிந்திய தோட்ட தொழிலதிபர் தலைவர் ஸ்ரீதரன், செயலாளர் பிரதீப் சுகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதில், நடப்பு 2023-24-ம் ஆண்டுக்கான தமிழ்நாடு தேயிலை தோட்ட தொழிலதிபர் சங்கத் தலைவராக டி.ஜே.வர்கீஸ் வைத்யன், துணைத் தலைவராக வினோதன் கந்தையா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். இவர்களுக்கு, தேயிலை தோட்ட தொழிலாளர் சங்கத்தினர் வாழ்த்து தெரிவித்தனர்.
தேயிலைத் தோட்ட தொழிலாளர்களுக்கு பண்டிகைக் காலத்தில் முன்பணமாக ரூ.3,600 அளிக்கப்பட்டு வருகிறது. இதை ரூ.6 ஆயிரமாக உயர்த்தித் தர வேண்டும் என தொழிலாளர்கள் வலியுறுத்தினர். இக்கூட்டத்தில் முடீஸ் பயனீர், உட்பிரியர் சான்மோர், தேனி ஹைவேஸ், மாஞ்சோலை, டாடா ஆகிய தேயிலை நிறுவனங்கள் சார்பில், தொழிலாளர்களுக்கு தீபாவளி போனஸாக 8.33 சதவீதம் வழங்கப்படும்.
டாடா நிறுவனம் சார்பில் வரும் 26-ம் தேதி ரூ.3 கோடியே 5 லட்சம் போனஸ் தொகையாக வழங்கப்படும். மற்ற நிறுவனங்கள் சார்பில் தீபாவளிக்கு 10 நாட்களுக்கு முன்பு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இந்த போனஸ் தொகையை கூடுதலாக வழங்க வேண்டுமென தொழிற்சங்க நிர்வாகிகள் கோரிக்கை விடுத்தனர்.