தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில், பொது இடங்களில் இருந்த 64 சாதி அடையாளங்களை கிராம மக்கள் தாமாக முன்வந்து அழித்தனர். இதன் மூலம் தூத்துக்குடி மாவட்டத்தில் 5,799 இடங்களில் இருந்த சாதிய அடையாளங்கள் அழிக்கப்பட்டுள்ளன.
தூத்துக்குடி ஊரக உட்கோட்டத்தில் முறப்பநாடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சேதுராமலிங்கபுரம் பகுதியில் 7 மின்கம்பங்கள், தெருக்குழாய், நெடுஞ்சாலைத்துறை அடையாள பலகை என 9 இடங்களிலும், கோவில்பட்டி உட்கோட்டத்தில் கழுகுமலை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஆறுமுகநகர் பகுதியில் 20 மின்கம்பங்களிலும், விளாத்திகுளம் உட்கோட்டத்தில் எட்டையாபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட குமாரரெட்டியாபுரம், மீனாட்சிபுரம் ஆகிய பகுதிகளில் 35 மின்கம்பங்கள் என 64 இடங்களில் அப்பகுதி ஊர்த்தலைவர்கள், முக்கியஸ்தர்கள் மற்றும் காவல்துறையினர் முன்னிலையில் அந்தந்த பகுதி மக்கள் தாமாகவே முன்வந்து வெள்ளை நிற பெயிண்டால் ஜாதிய அடையாளங்களை அழித்தனர்.
இதுவரை ஒட்டுமொத்தமாக, தூத்துக்குடி மாவட்டத்தில் 5 ஆயிரத்து 799 இடங்களில் இருந்த சாதி அடையாளங்கள் அழிக்கப்பட்டுள்ளன. கிராமமக்களின் இத்தகைய செயலுக்கு மாவட்ட எஸ்.பி. பாலாஜி சரவணன் பாராட்டு தெரிவித்துள்ளார்.