சிவகாசி: தீபாவளியையொட்டி, நாடு முழு வதும் ரூ.6 ஆயிரம் கோடி அளவுக்கு பட்டாசுகள் விற்பனை ஆனது. இதனால் உற்பத்தியாளர்கள் மற்றும் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர். சிவகாசி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சிறிய மற்றும் பெரிய அளவில் 1,070 பட்டாசு ஆலைகள் இயங்கி வருகின்றன. நாட்டின் மொத்த பட்டாசு உற்பத்தியில் இங்கு 95 சதவீதத்துக்கு மேல் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, சிவகாசி பட்டாசு ஆலைகளில் பசுமைப் பட்டாசு மட்டுமே உற் பத்தி செய்யப்படுகிறது.
பல்வேறு கட்டுப்பாடுகள்: சிவகாசி சுற்றுவட்டாரப் பகுதிகளில் நிரந்தர உரிமம் பெற்ற 2,500-க்கும் மேற்பட்ட பட்டாசு விற்பனைக் கடைகள் உள்ளன. பேரியம் நைட்ரேட் பயன்படுத்த தடை, சரவெடி உற்பத்திக்கு தடை உள்ளிட்ட கட்டுப்பாடுகளால் 60 சதவீத பட்டாசுகள் மட்டும் உற்பத்தி செய்யப்படுகின்றன. மூலப்பொருட்கள் தட்டுப்பாட்டால், கடந்த ஆண்டு பட்டாசு விலை 40சதவீதம் அதிகரித்தது. இருப்பினும்ரூ.6 ஆயிரம் கோடி அளவுக்கு பட்டாசு விற்பனை நடைபெற்றது. இந்த ஆண்டு முன்னதாகவே, ஆஃப் சீசன் பட்டாசு உற்பத்தி தொடங்கியது. ஆஃப் சீசன் விற்பனை பாதிப்பு மற்றும் வடமாநிலஆர்டர் குறைவு ஆகிய பிரச்சினை கள் இருந்தன.
இருப்பினும் தீபாவளி பட்டாசு விற்பனையில் எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்த வில்லை. இந்த ஆண்டு தீபாவளி சீசனுக் காக ஆடிப்பெருக்கு அன்று 1,500 பட்டாசு விற்பனை கடைகள் சிறப்பு பூஜையுடன் தொடங்கப்பட்டன. இறுதிக்கட்டத்தில் நாடு முழுவதும்பட்டாசு விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்றதால், கடந்த ஆண்டைப் போல் இந்த ஆண்டும் பட்டாசு விற்பனை ரூ.6 ஆயிரம் கோடி அளவுக்கு நடைபெற்றது.
முழுவதும் விற்றுத் தீர்ந்தன: இதுகுறித்து பட்டாசு உற்பத்தியாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் கூறும்போது, ‘‘தொடர்விபத்து, அதிகாரிகள் ஆய்வு, தமிழகத்தில் தீபாவளி பட்டாசு கடைகளுக்கு அனுமதி வழங்குவதில் ஏற்பட்ட தாமதத்தால் ஆரம்பத்தில் பட்டாசு விற்பனை மந்தமாக இருந்தது. ஆனால் இறுதிக்கட்ட விற்பனை மும்முரமாக நடந்ததால், கடந்த ஆண்டைப்போல் இந்த ஆண்டும் உற்பத்தியாளர்கள், மொத்த மற்றும் சிறு விற்பனை யாளர்களிடம் இருந்த அனைத்து பட்டாசுகளும் விற்று தீர்ந்து விட்டன’’ என்று கூறினர்.