வேலூர்: வேலூர் திருவள்ளுவர் பல்கலைக்கழக பருவத் தேர்வில் 2021-ல்வெளியான கேள்வித்தாளே, தற்போது நடைபெற்று வரும் பருவத்தேர்வில் மீண்டும் விநியோகிக்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்திஉள்ளது.
வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் செயல்படும் 70-க்கும் மேற்பட்ட கல்லூரிகள் திருவள்ளுவர் பல்கைலக்கழக கட்டுப்பாட்டில் உள்ளன. இவற்றில் சுமார் 2.50 லட்சம் மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர்.
பல்கலையில் தற்போது பருவத்தேர்வுகள் நடைபெற்று வரும்நிலையில், முதுநிலை கணிதவியல் 3-வது பருவத் தேர்வில் கடந்த2021-ம் ஆண்டின் கேள்வித்தாள் அப்படியே மீண்டும் விநியோகிக்கப்பட்டுள்ளது. TOPOLOGY, DIFFERENTIAL GEOMETRY, COMPLEX ANALYSIS-1 ஆகிய மூன்று தேர்வுகளில், பழையகேள்வித்தாளே மீண்டும் விநியோகிக்கப்பட்டது மாணவர்கள்மற்றும் கல்லூரி ஆசிரியர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்திஉள்ளது.
இதுகுறித்து கல்லூரி ஆசிரியர்கள் தரப்பில் கேட்டபோது, ‘‘கடந்த சில ஆண்டுகளாகவே திருவள்ளுவர் பல்கலை. தேர்வுகளும், அதன் முடிவுகளும் சர்ச்சைக்கு உள்ளாகி வருகின்றன. தற்போது பழைய கேள்வித்தாள் மீண்டும் விநியோகம் செய்யப்பட்டுள்ளது. பழைய கேள்வித்தாளை மீண்டும் விநியோகம் செய்யும் நிலையில், எதற்காக கேள்வித்தாள் வடிவமைப்புக் குழு அமைத்து, அவர்களுக்கு பணம் வழங்க வேண்டும்?
பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டுத் துறை, சரியான முறையில் செயல்படுவதில்லை. கேள்வித்தாள் வடிவமைப்புக் குழுவிடம் பெறப்படும் கேள்வித் தாள்களை, சரிபார்ப்புக் குழு ஆய்வுசெய்ததா என்றும் தெரியவில்லை. மேலும், கேள்வித்தாள் வடிவமைப்புக் குழுவுக்கு சரியான நேரத்துக்கு பணம் வழங்குவதில்லை என்றும் கூறப்படுகிறது’’ என்றனர்.
.
திருவள்ளுவர் பல்கலை. ஒருங்கிணைப்புக் குழு செயலாளரும், பேராசிரியருமான ஆண்டனி பாஸ்கரன் கூறும்போது, ‘‘திருவள்ளுவர் பல்கலைக்கழக கல்விக் குழுவில் கடந்த 2 ஆண்டுகளாக கல்லூரி ஆசிரியர்கள், கல்லூரி முதல்வர்கள் உள்ளிட்ட 22 பேர் உறுப்பினர்களாக நியமனம் செய்யப்படவில்லை. இதனால், பல்கலை.க்கு உரிய அறிவுரை வழங்க முடியவில்லை. எங்கள் பங்களிப்பு இல்லாமல், பல்கலை. பாடத் திட்டங்களையும் மாற்றிவிட்டனர்’’ என்றார்.
பல்கலை. தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் பாபு ஜனார்தனம் ‘இந்து தமிழ் திசை’ செய்தியாளரிடம் கூறும்போது, ‘‘பழைய கேள்வித்தாள் வெளியானது தொடர்பாக சம்பந்தப்பட்ட பேராசிரியரிடம் விளக்கம் கேட்டுள்ளோம்.அவர் அளிக்கும் விளக்கத்தின்அடிப்படையில், அடுத்தகட்டநடவடிக்கை மேற்கொள்ளப்படும்” என்றார்.