திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவத்தில் 3-ம் நாளான நேற்று காலை சிம்ம வாகனத்திலும், இரவு முத்துப் பல்லக்கிலும் உற்சவர் பவனி வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவம் கடந்த 18-ம் தேதி மாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையடுத்து சுவாமிக்கு ஆந்திர அரசு சார்பில் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி பட்டு வஸ்திரத்தை காணிக்கையாக வழங்கினார். புரட்டாசி மாதம் முதல் நாளன்றே பிரம்மோற்சவம் தொடங்கியதால் சுவாமி தரிசனம் செய்ய பக்தர்கள் ஆவலுடன் திருமலைக்கு வந்த வண்ணம் உள்ளனர். இந்நிலையில் பிரம்மோற்சவத்தின் முதல் நாள் இரவு பெரிய சேஷ வாகனத்திலும், 2-ம் நாள் செவ்வாய்க்கிழமை காலை சின்ன சேஷ வாகனம், இரவு அன்ன வாகனத்திலும் பக்தர்களுக்கு மலையப்பர் காட்சி அளித்தார்.
இந்நிலையில் 3-ம் நாளான நேற்று காலை யோக முத்திரையில், சிம்ம வாகனத்தில் ஸ்ரீநிவாசர் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமியை தரிசித்தனர். மேலும் மாட வீதிகளில் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த கலைஞர்களின் நடன நிகழ்ச்சிகள் பலரை கவர்ந்தது.
மாலையில் சிறப்பு திருமஞ்சன நிகழ்ச்சியும், ஊஞ்சல் சேவையும் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து இரவு முத்துப் பல்லக்கில் ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக மலையப்பர் 4 மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.