பெங்களூரு: கர்நாடக முன்னாள் முதல்வரும், முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் மகனுமான குமாரசாமி தீபாவளி பண்டிகைக்கு திருட்டு மின்சாரத்தை பயன்படுத்தி தனது வீட்டை அலங்கரித்ததாக சொல்லப்பட்ட விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக முன்னாள் முதல்வர் குமாரசாமி பெங்களூருவில் உள்ள ஜே.பி.நகரில் தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். தீபாவளி பண்டிகையொட்டி அவரது வீடு மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. இதற்காக, மின் கம்பத்தில் இருந்து நேரடியாக மின்சாரத்தை திருடப்பட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வெளியானது. இதனை கர்நாடக காங்கிரஸ் ஐடி பிரிவு, எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்து, ”உலகிலேயே நேர்மையானவரான குமாரசாமியின் வீட்டின் அலங்கார விளக்குகளுக்கு சட்ட விரோதமாக மின்சார இணைப்பு எடுக்கப்பட்டுள்ளது. மின்சாரத்தை திருடும் அளவுக்கு ஏழ்மையில் வாடும் முன்னாள் முதல்வரின் நிலை ஆழ்ந்த வருத்தத்துக்கு உரியது. அவர் வேண்டுமானால் 200 யூனிட் இலவச மின்சாரம் அளிக்கும் திட்டத்துக்கு விண்ணப்பிக்கலாம்” என விமர்சித்தது.
இதுகுறித்து குமாரசாமி கூறுகையில், “இந்த தவறுக்காக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். மின்வாரிய அதிகாரிகள் அபராதம் விதித்தால் அதனை செலுத்த தயாராக இருக்கிறேன். நான் ஒருபோதும் அரசின் சொத்தை அபகரிக்க மாட்டேன். எனது வீட்டை அலங்கரித்த பணியாளர்கள் இந்த தவறை செய்துள்ளனர். காங்கிரஸார் மிகவும் சிறிய விவகாரத்தை கையிலெடுத்துக்கொண்டு எனது வாயை அடைக்க முயற்சிக்கின்றனர்” என்றார்.
இந்நிலையில், கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமார், ”குமாரசாமி மீது மின்வாரியம் உரிய நடவடிக்கை எடுக்கும். வழக்கு ஏதேனும் போடப்பட்டுள்ளதா என தெரியவில்லை” என தெரிவித்தார். இதனிடையே, மின்வாரிய ஊழியர் குமாரசாமியின் வீட்டுக்கு சென்று மின்சார திருட்டு குறித்து விசாரணை மேற்கொண்டனர். மின்சாரத்தை திருடியதற்காக குமாரசாமிக்கு அபராதம் விதிக்கவும் திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.